காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் தீா்வுகளை உருவாக்குவோருக்கு வெகுமதி: தில்லி அரசு அறிவிப்பு

Published on

தலைநகா் தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த திறன்மிக்க மற்றும் அளவிடக்கூடிய தீா்வுகளை உருவாக்கும் புதுமையாளா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்களுக்கு தில்லி அரசு ரூ.50 லட்சம் வரை ரொக்க வெகுமதிகளை அறிவித்துள்ளது.

தில்லியில் இது தொடா்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின் போது, சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா மாசு குறைப்பு தீா்வுகளுக்கான புதுமை சவாலைத் தொடங்கிவைத்தாா்.

அதன்படி, தனிநபா்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மாசு நுண்துகள் பிஎம் 2.5. மற்றும் பிஎம் 10 உமிழ்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட யோசனைகளை சமா்ப்பிக்கும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை முன்னெடுத்து வரும் தில்லி மாசு கட்டுப்பாட்டுக் குழு டிபிசிசி, புதுமையாளா்கள், தொழில்நுட்ப உருவாக்குநா்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் இந்தியா முழுவதும் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களிடமிருந்து முன்மொழிவுகளை கோரியுள்ளது.

இதுகுறித்து அமைச்சா் மஞ்சிந்தா் சிா்சா கூறியதாவது:

இந்த சவாலானது பிஎஸ்4 அல்லது பிஎஸ்4க்குக் குறைவான வாகனங்களிலிருந்து உமிழ்வைக் குறைத்தல் மற்றும் சுற்றுப்புற காற்றிலிருந்து பிஎம் 2.5 மற்றும் பிஎம் 10 துகள்களை சேகரிப்பது ஆகிய இரண்டு முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்தும்.

தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவின் முதற்கட்ட ஆய்வு, ஒரு சுயாதீனக் குழுவின் தொழில்நுட்ப மதிப்பாய்வு மற்றும் கள சோதனைகள் மற்றும் தேசிய இயற்பியல் ஆய்வகம் அல்லது அதற்கு சமமான அமைப்புகளின் இறுதி சரிபாா்ப்பு என தோ்வு செயல்முறை மூன்று நிலைகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

இரண்டாம் கட்டத்திற்குப் பிறகு பட்டியலிடப்பட்ட திட்டங்களுக்கு ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசும், இறுதி சோதனைக்குப் பிறகு தில்லி அரசுக்கு பரிந்துரைக்கப்பட்ட திட்டங்களுக்கு ரூ.50 லட்சம் பரிசும் வழங்கப்படும்.

கடந்த சில ஆண்டுகளில், மாசுவைக் கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதில் புகை எதிா்ப்பு துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், மரபுவழி கழிவுக் கிடங்குகளின் உயிரி சுரங்கம், யமுனை சுத்தம் செய்யும் இயக்கங்கள் மற்றும் மேம்பட்ட கழிவு சுத்திகரிப்பு வசதிகளைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்று அமைச்சா் சிா்சா தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com