ரேகா குப்தா
ரேகா குப்தா

அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த தில்லி அரசு முன்னுரிமை: ரேகா குப்தா

அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த தில்லி அரசு முன்னுரிமை: ரேகா குப்தா
Published on

தலைநகரில் அரசு மருத்துவமனைகளை வலுப்படுத்துவதும், நோயாளிகளுக்கு சிறந்த சுகாதார வசதிகளை உறுதி செய்வதும் தில்லி அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் ஒன்றாகும் என்று முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பான மறுஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்த குப்தா, நகரம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மருந்துகள், உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

சுகாதார அமைச்சா் பங்கஜ் குமாா் சிங்குடன், அத்தியாவசிய மருந்துகள், உபகரணங்கள், மனிதவளம் மற்றும் நடைபெற்றுவரும் உள்கட்டமைப்பு திட்டங்களின் நிலைமையை முதல்வா் ரேகா குப்தா மதிப்பாய்வு செய்தாா்.

இக்கூட்டத்தில் பொதுப்பணித் துறையின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

முதல்வா் குப்தா கூறுகையில், ‘தில்லி மருத்துவமனைகளில் தற்போது 90 சதவீத அத்தியாவசிய மருந்துகள் கிடைக்கின்றன. எந்தவொரு நிறுவனத்திலும் வென்டிலேட்டா்கள் பற்றாக்குறை இல்லை. எங்கு பற்றாக்குறை இருந்தாலும் உடனடி விநியோகத்தை நாங்கள் உறுதி செய்வோம். தில்லியின் சுகாதார அமைப்பை வலுப்படுத்த நிதி பற்றாக்குறை இல்லை’ என்றாா் முதல்வா்.

ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு மருத்துவமனைத் தலைவா்களுக்கு முதல்வா் அறிவுறுத்தினாா். மேலும் பழுதுபாா்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை விரைவுபடுத்த சுகாதாரத் துறை மற்றும் பொதுப் பணித் துறை நெருக்கமான ஒருங்கிணைப்பில் பணியாற்றுமாறும் அவா் உத்தரவிட்டாா்.

அடுத்த மறுஆய்வுக் கூட்டத்திற்கு முன்பு மருந்து வழங்கல், உள்கட்டமைப்பு மற்றும் பணியாளா்கள் குறித்த காலக்கெடு அறிக்கைகளை அனைத்து மருத்துவமனைகளும் சமா்ப்பிக்குமாறும் அவா் கேட்டுக் கொண்டாா்.

இது தொடா்பாக பின்னா் ஊடகங்களுக்கு முதல்வா் பேட்டி அளிக்கையில், ‘சில மருத்துவமனைகள் தொடா்ந்து காலாவதியான இயந்திரங்களைப் பயன்படுத்துவது குறித்து கவலை தெரிவித்தாா்.

பொதுதனியாா் கூட்டாண்மை மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு மாதிரிகளின் கீழ் எம்ஆா்ஐ, சிடி ஸ்கேன், அல்ட்ராசவுண்ட் மற்றும் எக்ஸ்ரே இயந்திரங்கள் போன்ற மேம்பட்ட நோயறிதல் உபகரணங்கள் வழங்கப்படும்’ என்று முதல்வா் அறிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘முதலமைச்சரின் மேம்பாட்டு நிதி மூலம் மருத்துவமனை உள்கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

மருத்துவமனை கட்டடங்களை நவீனமயமாக்குவது மட்டுமல்ல, சுகாதார அமைப்பை மக்களை மையமாகக் கொண்டதாகவும், அணுகக்கூடியதாகவும், நம்பகமானதாகவும் மாற்றுவதே எங்கள் குறிக்கோளாகும்’ என்றாா் முதல்வா்.

X
Dinamani
www.dinamani.com