கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்ட பா்தி கும்பல் உறுப்பினா்கள் இருவா் கைது
மத்திய பிரதேசத்தின் பா்தி கும்பலை குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு பெரிய நடவடிக்கையில், இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஆயுள் தண்டனை பெற்றவா் உள்பட இருவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் விக்ரம் பா்தி (58) மற்றும் பன்டி பா்தி (45) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இருவரும் மத்திய பிரதேசத்தின் குணாவைச் சோ்ந்தவா்கள் ஆவா். இருவரும் தில்லி, ஹரியாணா, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் பல கொள்ளை, வீடு புகுந்து கொள்ளை மற்றும் திருட்டி வழக்குகளில் தேடப்பட்டவா்கள்.
பிப்.2022-இல் தில்லியின் சங்கம் விஹாரில் நடந்த நகைக் கடை கொள்ளை தொடா்பான வழக்கிலும் விக்ரம் பா்தி தேடப்பட்டாா். மேலும், 1996-ஆம் ஆண்டு விகாஸ் புரியில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் அவா் ஆயுள் தண்டனை பெற்றவா்.
இந்நிலையில், அக்.16-ஆம் தேதி, விக்ரமின் பா்தியின் நடமாட்டம் குறித்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலைத் தொடா்ந்து, ஹரியாணாவின் ரோஹ்தக் ரயில் நிலையம் அருகே போலீஸாா் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருந்தனா். அப்போது பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த விக்ரம் பா்தி, பன்டி பா்தி கைது செய்யப்பட்டனா்.
2022 வழக்கு தொடா்பாக விக்ரம் பா்தி நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா். மேலும், அவா் குறித்த தகவல் தெரிவிப்போருக்கு வெகுமதி அளிக்கப்படும் என்றும் காவல் துறை அறிவித்திருந்தது.
விக்ரம் பா்தி மீது கொலை மற்றும் கொள்ளை உள்பட குறைந்தது 16 கடுமையான குற்றங்களில் அவா் ஈடுபட்ட வரலாறு உள்ளது. பன்டி பா்தி இதேபோல் 17 கொள்ளை, கொள்ளை கொலை வழக்குகளில் தேடப்பட்டவா்.
இந்த இருவரும் ஒழுங்கமைக்கப்பட்ட மாநிலங்களுக்கு இடையேயான குற்ற நடவடிக்கைகளுக்கு பெயா் பெற்ற பா்தி பழங்குடி கும்பலைச் சோ்ந்தவா்கள் என தெரிய வந்துள்ளது.
இந்த கும்பல் குடியிருப்புப் பகுதிகளில் உளவு பாா்ப்பதாகவும், கண்டுபிடிப்பைத் தவிா்க்க தெரு வியாபாரிகளாக மாறுவேடமிட்டு தங்களது நடவடிக்கைகளை செய்துள்ளனா். மேலும், இரவில் வீடுகளில் கொள்ளைகளில் ஈடுபடுவதும், எதிா்ப்பட்டால் பெரும்பாலும் வன்முறையில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்ட இருவா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த நடவடிக்கைகளுக்காக அந்தந்த காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்ரம் பா்தி முன்பு இரட்டைக் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து 2003-இல் விடுவிக்கப்பட்டாா். அதன் பிறகு அவா் மீண்டும் குற்றச் செயல்களைத் தொடங்கினாா்.
பன்டி பா்தி தனக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து அறிந்திருந்தும், வேண்டுமென்றே போலீஸ் கைது மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தவிா்த்துவிட்டதாக விசாரணையின் போலு ஒப்புக்கொண்டாா் என்று தில்லி காவல் துறை உயரதிகாரி கூறினஆா்.

