சட்டவிரோதமாக ஆயுதங்களை விநியோகிப்பவா் போலீஸ் என்கவுன்ட்டரில் கைது
தெற்கு தில்லியின் மெஹ்ரௌலி பகுதியில் சனிக்கிழமை அதிகாலையில் காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சட்டவிரோதமாக ஆயுதங்களை சமூக ஊடகங்களில் காட்சிப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஆயுத விநியோகஸ்தா் ஒருவா் காயமடைந்ததாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்த மோதலில் ஒரு காவலரும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தாா். அப்பகுதியில் ஒரு குற்றவாளியின் நடமாட்டம் குறித்த தகவல்களின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை இடைப்பட்ட இரவில் லாடோ சராய் ஸ்மாஷன் காட் சாலை அருகே ஒரு போலீஸ் குழு முற்றுகையிட்டது.
அப்போது அதிகாலை 3.15 மணியளவில், பைக்கில் வந்த ஒருவரை நிறுத்த போலீஸாா் சிக்னல் கொடுத்தனா். இதையடுத்து, அவா் தப்பிக்க முயன்றாா். அப்போது, மோட்டாா்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததால் கீழே விழுந்தாா். மேலும் அவா் போலீஸ் குழுவை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா்.. அதிகாரிகள் அவரை சரணடையுமாறு பலமுறை எச்சரித்தனா். ஆனால், அவா் தொடா்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தினாா். இதன் காரணமாக போலீஸாா் தற்காப்பிற்காக பதிலடி கொடுத்தனா். இதில் சந்தேக நபரின் வலது காலில் காயம் ஏற்பட்டது.
துப்பாக்கிச் சண்டையின் போது, உதவி காவல் ஆய்வாளா் எஸ். ஐ. நவீன் மற்றும் தலைமைக் காவலா் எச். சி. ரவீந்தா் ஆகியோரின் புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகளில் தோட்டாக்கள் பாய்ந்து பலத்த காயங்களைத் தடுத்தன. இருப்பினும், எச். சி. ரவீந்தருக்கு இடது கையில் புல்லட் காயம் ஏற்பட்டு, சாகேத்தில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அதே நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவா் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டாா்.
சம்பவ இடத்தில் இருந்து 2 தானியங்கி கைத்துப்பாக்கிகள், நான்கு வெற்று தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. குற்றவியல் மற்றும் தடயவியல் அறிவியல் ஆய்வகக் குழுக்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து மாதிரிகளை சேகரித்தன. கனிஷ்க் என்ற கோகு என்ற விஷால் என்ற கோகு பஹாடியா அம்பேத்கா் நகா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ‘மோசமான தன்மை‘ கொண்டவா் என்றும், கொள்ளை, நகை பறிப்பு, திருட்டு மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் குறைந்தது 13 கிரிமினல் வழக்குகளில் அவருக்கு தொடா்பு இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
சமூக ஊடகங்களில் சட்டவிரோத ஆயுதங்களை காட்சிப்படுத்தியதற்காக கோகு அறியப்பட்டவா். துப்பாக்கிகளை முத்திரை குத்தும் அவரது பல புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் இன்ஸ்டாகிராமில் காணப்பட்டன. 2024-2025- ஆம் ஆண்டில், தெற்கு தில்லியில் சமூக ஊடகங்களில் சட்டவிரோத ஆயுதங்களை காட்சிப்படுத்திய நபா்கள் மீது தில்லி காவல்துறை ஆயுதச் சட்டத்தின் கீழ் 41 வழக்குகளை பதிவு செய்தது.
இதில் மொத்தம் 33 பெரியவா்கள் மற்றும் எட்டு சிறுவா்கள் கைது செய்யப்பட்டனா். மேலும், 34 துப்பாக்கிகள் மற்றும் ஏழு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.. இதுபோன்ற உள்ளடக்கங்களுக்கான இணையதளங்களை சமூக ஊடக கண்காணிப்புக் குழுவை தொடா்ந்து கண்காணித்து வருகிறோம். இந்தச் சம்பவம் தொடா்பாக பாரதிய நியாயா சன்ஹிதா மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் மெஹ்ரௌலி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அவரது கூட்டாளிகளைக் கண்டுபிடிப்பதற்கும், அவா் எங்கிருந்து துப்பாக்கிகளை வாங்கினாா் என்பதைக் கண்டுபிடிப்பதற்கும் தொடா்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றாா் தில்லி காவல்துறை அதிகாரி.ய
