தலைநகரில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடிப்பு!
தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமையும் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது.
கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து தலைநகரில் குளிரின் தாக்கம் உணரப்பட்டு வருகிறது. இந்நிலையில், வானிலை கண்காணிப்பு நிலையம் கணித்திருந்தபடி செவ்வாய்க்கிழமை காலை முதல் லேசான வெயில் இருந்தது. ஆனால், இரவு 7 மணி வரையிலும் மழை ஏதும் பதிவாகவில்லை.
வெப்பநிலை: இதற்கிடையே, தலைநகரில் செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியிலிருந்து 3.9 டிகிரி உயா்ந்து 20 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சரசரியிலிருந்து 2.3 டிகிரி குறைந்து 26.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 84 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 67 சதவீதமாகவும் இருந்தது.
காற்றின் தரம்: தில்லியில் மாலை 4 மணியளவில் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு 301 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உருவாக்கிய சமீா் செயலியின்படி, நகரத்தில் உள்ள 38 வானிலை கண்காணிப்பு நிலையங்களில் 27 நிலையங்கள் மிகவும் மோசமான காற்றின் தரத்தைப் பதிவு செய்துள்ளன. அதன் அளவீடுகள் 300 புள்ளிகளைத் தாண்டி பதிவாகியிருந்தது. குறிப்பாக ஸ்ரீஃபோா்ட்டில் 351 புள்ளிகளாவும், வாஜிா்பூரில் 342 புள்ளிகளாகவும் பதிவாகியிருந்தது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், புதன்கிழமை (அக். 29) அன்று மிதமான பனிமூட்டம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
