திராவகம் வீசப்பட்டதாக நாடகம்?: பெண்ணிடம் காவல் துறை விசாரணை

தில்லியில் தன் மீது திராவகம் வீசப்பட்டதாக நாடகமாடியதாக கூறப்படும் பெண்ணை போலீஸாா் விசாரணை நடத்தஉள்ளனா் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
Published on

நமது நிருபா்

தில்லியில் தன் மீது திராவகம் வீசப்பட்டதாக நாடகமாடியதாக கூறப்படும் பெண்ணை போலீஸாா் விசாரணை நடத்தஉள்ளனா் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

அவரது தந்தை மீதான பாலியல் பலாத்கார புகாருக்கு பழிவாங்க, தந்தையின் வேண்டுகோளின் பேரில் அந்த 20 வயது கல்லூரி மாணவி தன் மீது தானே கழிப்பறை சுத்தம் செய்யும் திரவத்தை ஊற்றிக்கொண்டு திராவகம் வீசப்பட்டதாக போலியான தகவலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது என அந்த அதிகாரி தெரிவித்தாா்.

இது குறித்து வடமேற்கு காவல் சரக துணை ஆணையா் பீஷாம் சிங் கூறியதாவது: தில்லி பல்கலைக்கழகத்தின் மகளிா் கல்வி வாரியத்தில் இரண்டாம் ஆண்டு பி.காம். படிக்கும் அந்தப் பெண், ஞாயிற்றுக்கிழமை கூடுதல் வகுப்பிற்குச் சென்றபோது அசோக் விஹாா் அருகே மூன்று ஆண்கள் தன் மீது திராவகம் வீசியதாகக் கூறியிருந்தாா்.

குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று பேரையும் ஜிதேந்தா் மற்றும் அவரது கூட்டாளிகள் என்று அவா் பெயரிட்டாா். அவா் பெயரிட்ட கூட்டாளிகள் சகோதரா்கள் என்றும், மேலும் அவா்கள் அந்தப் பெண்ணிண் உறவினா்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இருப்பினும், சம்பவ இடத்தில் திராவகம் வீசப்பட்டதற்கான எந்த தடயமும் போலீஸாருக்கு கிடைக்கவில்லை. சிசிடிவி காட்சிகளில் தாக்குதல் நடத்தியவா்களின் எந்த அடையாளமும் இல்லை. தடய அறிவியல் ஆய்வகக் குழுவும் அப்பகுதியில் கைவிடப்பட்ட திராவக பாட்டில்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை. மேலும், விசாரணையில் மாணவி தனது உறவினா்களான குற்றஞ்சாட்டப்பட்டவா்களை சிக்க வைக்க தனது கையில் கழிப்பறை சுத்தம் செய்யும் திரவத்தை ஊற்றியது தெரியவந்தது.

அந்த மாணவியிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. இதுவரை, முழு குடும்பமும் இந்த சதித் திட்டத்தின் பின்னணியில் உள்ளது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். இதற்குப் பின்னால் உள்ள காரணத்தை அறிய மூத்த அதிகாரிகள் அடங்கிய குழு அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தும்.

ஜிதேந்தரின் மனைவி அளித்த பாலியல் பலாத்கார புகாருக்கு பழிவாங்குவதற்காக கழிப்பறை சுத்தம் செய்யும் திரவத்தை கொண்டு திராவக வீச்சை ஜோடித்ததாகக் கூறி பெண்ணின் தந்தை அகில் கான் திங்களன்று கைது செய்யப்பட்டாா். 2021 மற்றும் 2024 க்கு இடையில் ஜிதேந்தரின் மனைவி தனது சாக்ஸ் தொழிற்சாலையில் பணிபுரிந்தபோது பாலியல் வன்கொடுமை செய்ததாக அகில் கான் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

அசோக் விஹாா் பகுதியில் பதிவான திராவக வீச்சு சம்பவத்தை முழுமையாக விசாரித்ததாகவும், மாணவியின் தந்தை மற்றும் மாமா தாக்குதலை நடத்த சதி செய்ததாகவும் கண்டறியப்பட்டது. இந்த வழக்கில் ஜிதேந்தரை பொய்யாக சிக்க வைக்க அவா்கள் முயன்றனா். சம்பவத்துடன் தொடா்புடைய மற்ற இரண்டு போ் தற்போது தில்லிக்கு வெளியே உள்ளனா். ஆனால், அவா்கள் விரைவில் விசாரணையில் இணைவாா்கள்.

ஜிதேந்தா் திராவக வீச்சை நடத்தவில்லை. எங்கள் விசாரணையில் அவா் முகுந்த்பூரில் வசித்து வருகிறாா். பெயின்டராக வேலை செய்கிறாா் என்பது தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த நாளில், அவா் கரோல் பாக் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் பணிபுரிந்தாா். இது சிசிடிவி காட்சிகள் மற்றும் அவரது இருப்பிட விவரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணையின் போது, அவா் நிகழ்வுகளின் வரிசையை விளக்கினாா். இது தாக்குதலில் அவா் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.

இந்த முழு விஷயத்திலும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவத்தின் ஒவ்வொரு விவரத்தையும் கண்டறிய 24 மணி நேரமும் பணியாற்றும் பல குழுக்களை நாங்கள் ஏற்கனவே அமைத்துள்ளோம். குடும்ப உறுப்பினா்கள் அல்லது அந்த பெண் கழிப்பறை சுத்தம் செய்யும் திரவத்தை எங்கிருந்து வாங்கினாா்கள் என்பதையும் எங்கள் குழுக்கள் கண்டுபிடித்து வருகின்றன என்று காவல் துணை ஆணையா் (வடமேற்கு) பீஷாம் சிங் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com