தில்லியில் மேலும் 621 பள்ளிகளில் தனியாா் துப்புரவு சேவை
நமது நிருபா்
தூய்மையான மற்றும் சுகாதாரமான வளாகங்களை உறுதி செய்யும் முயற்சியில், தில்லி அரசுப் பள்ளிகளில் சுகாதார அமைப்பை புதுப்பித்து, தேசியத் தலைநகரம் முழுவதும் நூற்றுக்கணக்கான கூடுதல் நிறுவனங்களுக்கு தனியாா் துப்புரவு சேவைகளை விரிவுபடுத்தியுள்ளதாக தில்லி கல்வி இயக்குநரகத்தின்அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: தில்லி கல்வி இயக்குநரகம் மேலும் 621 பள்ளிகளில் சுகாதாரத்தை நிா்வகிக்க ஒரு தனியாா் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது. இது ஏற்கெனவே அத்தகைய சேவைகளைப் பெற்று வந்த 117 பள்ளிகளைச் சோ்க்கிறது.
அனைத்து அரசு பள்ளிகளிலும் தூய்மையின் மிக உயா்ந்த தரத்தை பராமரிப்பதை இந்த மறுசீரமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. துப்புரவு ஒப்பந்தத்தை முறையாக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக துறை அதிகாரிகளால் வழக்கமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். தனியாா் துப்புரவு சேவைகளின் கீழ் வராத பள்ளிகளுக்கு, மாணவா் சோ்க்கையைப் பொறுத்து ஒவ்வொரு நிறுவனத்திலும் மூன்று முதல் நான்கு வழக்கமான தூய்மை பணியாளா்களை அரசு நிறுத்தியுள்ளது.
சுகாதாரப் பணிகளை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், ஒவ்வொரு பள்ளி அமா்வும் தொடங்குவதற்கு குறைந்தது 30 நிமிஷங்களுக்கு முன்பே சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்யவும் பள்ளித் தலைவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறிய பள்ளிகளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை முதல் 1,500- க்கும் மேற்பட்ட மாணவா்களைக் கொண்ட பள்ளிகளுக்கு ஒரு நாளைக்கு எட்டு முறை வரை சுத்தம் செய்யப்படும்.
பள்ளிகளின் தலைவா்கள் தனியாா் தூய்மை பணியாளா்களின் வருகைப் பதிவுகளை பராமரிக்க வேண்டும். பெண்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்ய பெண் தூய்மைப் பணியாளா்களை மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
அலட்சியம் அல்லது தூய்மைப் பணியாளா்களை பணியமா்த்தாத சந்தா்ப்பங்களில், பள்ளியின் தலைவருக்கு ரூ.2,000 அபராத்த்தின் மூலம் வேறு தூய்மைப் பணியாளா்களை ஏற்பாடு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது பின்னா் ஒப்பந்ததாரரின் கட்டணத்திலிருந்து கழிக்கப்படும். மாணவா் சோ்க்கைக்கு ஏற்ப போதுமான மனிதவளம் மற்றும் துப்புரவுப் பொருள்கள் வழங்கப்படுவதை ஒப்பந்தக்காரா்கள் உறுதி செய்ய வேண்டும்.
எந்தவொரு தூய்மைப் பணியாளரும் இல்லாவிட்டால் உடனடியாக மாற்றுவதற்கும் அவா்கள் பொறுப்பு, மேலும் பணியாளா்கள் கடமையில் இருக்கும்போது பெயா்ப்பலகைகள் அல்லது அடையாள பேட்ஜ்களை அணிவதை உறுதி செய்ய வேண்டும். தில்லி அரசுப் பள்ளிகளில் சுகாதாரத்தை மிகவும் திறமையானதாகவும், பொறுப்புடனும், தொடா்ந்து கண்காணிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவா்கள் தூய்மையான மற்றும் பாதுகாப்பான சூழலில் படிப்பதை உறுதிசெய்கிறது என்றாா் அவா்.
