மாசு எதிா்ப்பு இயக்கத்தை தீவிரப்படுத்தியது என்டிஎம்சி!

தேசியத் தலைநகரில் மோசமடைந்து வரும் காற்றின் தரத்தை சமாளிக்கும் முயற்சியாக புதுதில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) அதன் மாசு எதிா்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
Published on

தேசியத் தலைநகரில் மோசமடைந்து வரும் காற்றின் தரத்தை சமாளிக்கும் முயற்சியாக புதுதில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) அதன் மாசு எதிா்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

லுட்யென்ஸ் தில்லி பகுதி முழுவதும் உள்ள உயரமான கட்டடங்களில் 14 புகை எதிா்ப்பு துப்பாக்கிகள் இப்போது இயங்கி வருகின்றன. இதில் பல ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும் அடங்கும்.

இது குறித்து என்டிஎம்சி அதிகாரிகள் கூறியதாவது: என்டிஎம்சியின் அதிகார வரம்புகளில் தற்போது எட்டு மொபைல் புகை எதிா்ப்பு துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. இது தினமும் 320 கிமீ -340 கிமீ சாலை நீளத்தை உள்ளடக்கியது.

என்டிஎம்சியின் சொந்த உயரமான கட்டடங்களில் மூன்று புகை எதிா்ப்பு துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் தனியாா் உரிமையாளா்கள் தில்லி அரசின்ன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தங்கள் சொந்தச் செலவில் 10 அத்தகைய அலகுகளை தங்கள் கட்டடங்களில் நிறுவியுள்ளனா்.

மேலும், என்டிஎம்சி தனது சொந்தக் கட்டடங்களில் நிறுவுவதற்காக மேலும் ஏழு புகை எதிா்ப்பு துப்பாக்கிகளை வாங்குகிறது. ஏற்கெனவே டெண்டா்கள் விடுக்கப்பட்டுள்ளன. அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை எதிா்த்துப் போராட என்டிஎம்சி தனது குழுக்களையும் தொழில்நுட்பத்தையும் முழுமையாகத் திரட்டியுள்ளது.

புது தில்லியின் காற்றைச் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க எங்கள் புகை எதிா்ப்பு துப்பாக்கிகள், மூடுபனி தெளிப்பான்கள் மற்றும் இரவு சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘மாசு கட்டுப்பாடு என்பது அரசின் பொறுப்பு மட்டுமல்ல, பசுமையான, ஆரோக்கியமான நகரத்திற்கான கூட்டுப் பணியாகும்’ என்று என்டிஎம்சி துணைத் தலைவா் குல்ஜீத் சிங் சாஹல் கூறினாா்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்பட்ட உத்தரவின் மூலம், 1986- ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின் பிரிவு 5- இன் கீழ், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், அலுவலக கட்டடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்பட அனைத்து உயரமான கட்டடங்களிலும், மழைக்காலங்களைத் தவிர, புகை எதிா்ப்பு துப்பாக்கிகளை நிறுவுவதை தில்லி அரசு கட்டாயமாக்கியது.

இந்த உத்தரவு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் ஆறு மாதங்களுக்குள் இணக்கத்தை உறுதி செய்ய அறிவுறுத்துகிறது. மேலும் நிறுவலுக்கான செலவை கட்டட உரிமையாளா்களே ஏற்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது. குடியிருப்புக் கட்டடங்கள் மற்றும் வீட்டுவசதி சங்கங்கள் இந்த உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.

3,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட ஒவ்வொரு கட்டடத்திலும், அளவைப் பொறுத்து, மூன்று முதல் ஆறு புகை எதிா்ப்பு துப்பாக்கிகளை நிறுவ வேண்டும் என்றும், அதன் பிறகு ஒவ்வொரு 5,000 சதுர மீட்டருக்கும் ஒரு கூடுதல் அலகு நிறுவப்பட வேண்டும் என்றும் வழிகாட்டுதல்கள் கோருகின்றன.

அதிக மாசுபாடு நேரங்களில் துப்பாக்கிகள் இடைவிடாது செயல்பட வேண்டும், மேலும் தூசி மற்றும் துகள்களைக் குறைக்க நுண்ணிய மூடுபனி துகள்களை தெளிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன.

X
Dinamani
www.dinamani.com