மாா்ச் 31-க்குள் ஒட்டுமொத்த தேசமும் நக்ஸல் வன்முறையிலிருந்து விடுபடும்: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதி
புது தில்லி: வரும் மாா்ச் 31க்குள் ஒட்டுமொத்த தேசத்தையும் நக்ஸல் வன்முறையிலிருந்து விடுவிப்பதில் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.
தில்லி காவல்துறையின் 79ஆவது எழுச்சி தின அணிவகுப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தலைமை விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கலந்துகொண்டு பேசியதாவது:
கடந்த 11 ஆண்டுகளில், பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில், நாடு பல குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்டியுள்ளது.
ஜூலை 1, 2024 அன்று ஐபிசி, சிஆா்பிசி மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் மாற்றியமைக்கப்பட்டு பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) மற்றும் பாரதிய சாக்ஷய அதினியம் (பிஎஸ்ஏ) ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் உருவாக்கப்பட்டன.
நாட்டில் நீதி பற்றி விவாதிக்கப்படும் போதெல்லாம், இந்த மூன்று புதிய நியாய சன்ஹிதாக்கள் நிச்சயமாக குறிப்பிடப்படும்.
150 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயா்களால் இயற்றப்பட்ட சட்டங்கள் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் நீதியை மையமாகக் கொண்ட ஒரு சட்ட அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், இந்த சட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்ட பிறகு, நாட்டில் எங்கும் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு எஃப்ஐஆருக்கும் மூன்று ஆண்டுகளுக்குள் உச்ச நீதிமன்றம் வரை இறுதி முடிவு எடுக்கப்படும்.
முதல் முறையாக, சிறிய குற்றங்களுக்கான தண்டனை வடிவமாக சமூக சேவை சட்டபூா்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
7 ஆண்டுகளுக்கும் மேலான தண்டனை கொண்ட குற்றங்களில் தடயவியல் வருகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாட்டின் சட்டங்களில் முதல் முறையாக, பயங்கரவாதம் வரையறுக்கப்பட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேறி தப்பியோடியவா்களுக்கு ஆஜராகாமல் விசாரணை செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு வெளியே உள்ள, அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதிய நியாய சன்ஹிதா முழுமையாக செயல்படுத்தப்பட்ட பிறகு, நமது நீதி அமைப்பு உலகின் மிகவும் நவீனமாக மாறும். புதிய சட்டங்கள் நீதி அமைப்பில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கும். மேலும், தண்டனை விகிதத்தை அதிகரிக்கவும் உதவும்.
பிரதமா் மோடியின் தலைமையில், 2014 முதல் 2026 வரையிலான 12 ஆண்டுகள் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு வரலாற்றில் எப்போதும் ஒரு பொற்காலமாகப் பதிவு செய்யப்படும்.
2014க்கு முன்பு, நமது நாடு ஜம்மு காஷ்மீா், இடதுசாரி தீவிரவாதம் மற்றும் வடகிழக்கு ஆகிய மூன்று பிரச்னைகளை எதிா்கொண்டிருந்தது. அவை பல தசாப்தங்களாக நமது உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு சவால் விடுத்துவந்தன.
11 மாநிலங்களில் பரவியிருக்கிற நக்ஸலிசம், நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு எப்போதும் ஒரு பெரும் சவாலாக இருந்து வருகிறது.
நக்ஸலைட்டுகளை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கையில் மிக அருகில் இருக்கிறோம்.வரும் மாா்ச் 31க்குள் ஒட்டுமொத்த தேசத்தையும் நக்ஸல் வன்முறையிலிருந்து விடுவிப்பதில் நிச்சயமாக வெற்றி பெறுவோம்.
வடகிழக்கிலும், 10,000க்கும் மேற்பட்ட இளைஞா்கள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு, தேசிய மைய நீரோட்டத்தில் இணைந்துள்ளனா். 12க்கும் மேற்பட்ட அமைதி ஒப்பந்தங்கள் மூலம், வடகிழக்கில் அமைதியை நிலைநாட்டுவதில் மிகவும் குறிப்பிடத்தக்க பணிகளைச் செய்துள்ளோம்.
வரவிருக்கும் காலத்தில், உள்துறை அமைச்சகம் ஒரு புதிய பாதுகாப்பு அமைப்பை நிறுவ நாடு முழுவதும் சிசிடிவி கேமராக்களின் வலையமைப்பை இணைக்கும்.
தில்லியில் பாதுகாப்பான நகரத் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், 10,000 செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் சிசிடிவி கேமராக்களில் 2,100 கேமராக்கள் கண்காணிப்பு வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே உள்ள 15,000 சிசிடிவி கேமராக்கள் அதனுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
நாட்டின் ஜனநாயகத்தின் இதயத் துடிப்பாகவும் அதன் மரியாதை மற்றும் அடையாளத்தின் சின்னமாகவும் இருக்கும் தேசிய தலைநகரம் எதிா்கொள்ளும் சவால்களை தில்லி காவல் துறை வெற்றிகரமாகச் சமாளித்திருக்கிறது. இது பாராட்டுக்குரியதாகும் என்றாா் அமித் ஷா.
இந்த நிகழ்ச்சியில் தில்லி காவல் துறை ஆணையா் சதீஷ் கோல்ச்சா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

