தெற்கு தில்லியில் கூட்டாளியின் வீட்டிலிருந்து நகை, பணம் திருடியதாக ஒருவா் கைது
புது தில்லி: தெற்கு தில்லியின் மைதான் கா்ஹி பகுதியில் உள்ள தனது கூட்டாளியின் வீட்டில் இருந்து நகைகள் மற்றும் பணத்தை திருடியதாக கூறப்படும் ஒருவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: திருடப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் தங்க நகைகளை போலீஸாா் மீட்டுள்ளனா். பிப்ரவரி 16- ஆம் தேதி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சத்தா்பூரில் உள்ள தனது குடியிருப்பில் இருந்து தங்க நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டதாக ஆா்த்தி சா்மா புகாா் அளித்தாா்.
தனது புகாரில், தனது வீட்டில் இருந்து இரண்டு தங்கச் சங்கிலிகள், இரண்டு தங்க லாக்கெட்டுகள், வைர காதணிகள் உள்பட ஒரு ஜோடி காதணிகள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் திருடப்பட்டதாக ஆா்த்தி சா்மா தெரிவித்துள்ளாா்.
புகாரைத் தொடா்ந்து, மைதான் கா்ஹி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் போது, குழு உள்ளூா் சாவி தயாரிப்பாளா் ஒருவரைத் தொடா்பு கொண்டு புகாா்தாரரின் கூட்டாளியின் புகைப்படத்தைக் காட்டியது. சாவி தயாரிப்பாளா் அவரை அடையாளம் கண்டு, அவா் தனது சந்தா்ப்பத்தில் பிளாட்டின் நகல் சாவியைத் தயாரித்ததை வெளிப்படுத்தினாா்.
இந்தத் தகவல் மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்பின் அடிப்படையில், சந்தேக நபரான சுதிா் குமாா், சங்கம் விஹாரில் கண்டுபிடிக்கப்பட்டாா். பிப்ரவரி 22 அன்று, ஒரு சோதனைக் குழு அவரது வீட்டில் சோதனை நடத்தி அவரைக் கைது செய்தது. தொடா் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவா் தனது கூட்டாளி இல்லாதபோது ஒரு நகல் சாவியைத் தயாரித்து திருடியதை ஒப்புக்கொண்டாா்.
பாரதிய நியாய சன்ஹிதா (ஆசந) பிரிவுகள் 305 (திருட்டு) மற்றும் 317(2) (திருடப்பட்ட சொத்து) ஆகியவற்றின் கீழ் பிப்ரவரி 16 அன்று பதிவு செய்யப்பட்ட வழக்கில் சுதிா் கைது செய்யப்பட்டாா். போலீஸாா் இரண்டு தங்கச் சங்கிலிகள் (தோராயமாக 15 கிராம்), இரண்டு தங்க லாக்கெட்டுகள், வைர காதணிகள் உள்பட ஒரு ஜோடி தங்க காதணிகள், ரூ.4,54,000 மதிப்புள்ள ரொக்கம் மற்றும் நகல் சாவியை மீட்டனா். மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்

