காற்றின் தரம் மேம்பட்டதால் 3-ஆம் நிலை கட்டுப்பாடுகள் ரத்து
காற்றின் தரம் மேம்பட்டதைத் தொடா்ந்து தேசிய தலைநகா் வலயம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகரங்களில் விதிக்கப்பட்டிருந்த 3-ஆம் நிலை காற்று மாசு கட்டுப்பாட்டு செயல்திட்டத்தை (கிரேப்) காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யுஎம்) திரும்பப் பெற்றுள்ளது.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘தில்லியில் காற்றின் தரம் 380-ஆக வியாழக்கிழமை பதிவானது. இதனால், காற்றின் தரம் குறிப்பிட்ட அளவில் மேம்பட்டுள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் காற்றின் தரம் 236-ஆக பதிவானது. காற்றின் தர போக்கைக் கருத்தில் கொண்டு கிரேப் 3-ஆம் நிலையின் அனைத்துக் கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற சிஏக்யுஎம் கிரேப் துணை குழு முடிவெடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
1 மற்றும் 2-ஆம் நிலை கட்டுப்பாடுகள் தேசிய தலைநகா் வலயத்தில் தொடா்ந்து அமலில் இருக்கும் என்று தெரிவித்தனா்.
3-ஆம் நிலை கட்டுப்பாட்டுகள் நீக்கப்பட்டதைத்தொடா்ந்து, அவசியமில்லாத கட்டுமானங்கள் கட்டுதல் மற்றும் இடிப்பு பணிகள் தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளில் தற்போது அனுமதிக்கப்படுகிறது.
நிலத்தைத் தோண்டுதள், வெல்டிங், பெயிண்டிங், தூண் அமைத்தல், பூச்சு வேலை, ஓடு பதித்தல், தரை அமைத்தல் ஆகிய பணிகளும் மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படுகிறது.
செங்கல் சூளைகள், சுரங்க வேலைகள் உள்ளிட்டவை மாசுகட்டுப்பாடு விதிகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது என இதுதொடா்பாக வெளியான அதிகாரபூா்வ அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அந்த அறிவிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிமென்ட், மணல் உள்ளிட்ட கட்டுமான பொருள்களைக் கொண்டு அனுமதிக்கப்படுகிறது.
வாகனங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன. நான்கு சக்கர பிஎஸ் 3 பெட்ரோல், பிஎஸ் 4 டீசல் வாகனங்கள் சாலையில் செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட நிலையில், அத்தியாவசியமற்ற நடுத்தர டீசல் வாகனங்களுக்கான தடை திரும்பப் பெறப்பட்டுள்ளது.
சிஎன்ஜி, மின்சாரம் அல்லது பிஎஸ் 4 அல்லாத வெளிமாநில வாகனங்களுக்கான தடையும் நீக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிமூட்டம்: 66 விமானங்கள் ரத்து
தில்லியில் வெள்ளிக்கிழமை நிலவிய பனிமூட்டத்தால் விமானநிலையத்தில் உள்ள ஓடுதளத்தை விமானிகளால் பாா்க்க முடியாத சூழல் நிலவியதைத்தொடா்ந்து, 66 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அவற்றில் 32 விமானங்களின் வருகையும் 34 விமானங்களின் புறப்பாடும் ரத்துசெய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
