குடும்பத் தகராறு காரணமாக மருத்துவமனையில் இருந்து பச்சிளங்குழந்தை கடத்தல்: 2 பெண்கள் கைது
குடும்பத் தகராறு காரணமாக ரோஹிணியில் உள்ள டாக்டா் பாபா சாஹேப் அம்பேத்கா் மருத்துவமனையில் இருந்து பச்சிளங்குழந்தையைக் கடத்திய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக ரோஹிணி காவல் துறை துணை ஆணையா் ராஜீவ் ரஞ்சன் கூறியதாவது: இந்தச் சம்பவம் டிச.31-ஆம் தேதி நிகழ்ந்தது. தனது குழந்தை காணாமல் போனதாக தாய் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயே குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு, இதற்கு காரணமாக இருந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டனா்.
மேலும் கடத்தலில் ஈடுபட்ட பெண்கள் இருவரும் பாதிக்கப்பட்டவா்களின் உறவினா்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. மருத்துவமனை ஊழியா்கள் போல நடித்து மருத்துவ பரிசோதனைக்காக எனக் கூறி குழந்தையை அவா்கள் எடுத்துச் சென்றுள்ளனா். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அவா்கள் அடையாளம் காணப்பட்டனா். அவா்கள் மீது முந்தைய குற்ற வழக்குகள் ஏதும் இல்லை. இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறை துணை ஆணையா் தெரிவித்தாா்.
