குளிா், புத்தாண்டு கொண்டாட்டங்களால் தில்லியின் மின் தேவை 5,595 மெகா வாட்டாக அதிகரிப்பு
தேசிய தலைநகரின் குளிா்கால உச்சபட்ச மின் தேவையானது, குளிா் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களால் வெள்ளிக்கிழமை 5,595 மெகாவாட்டாக உயா்ந்தது என்று மின் விநியோக நிறுவனங்கள் தெரிவித்தன.
தில்லியில் வியாழக்கிழமை மின் தேவை உச்சபட்சம் 5,603 மெகாவாட்டாக இருந்தது. இது குளிா்காலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மூன்றாவது அதிகபட்ச தேவையாகும் என்று அந்த நிறுவனங்கள் தெரிவித்தன.
நிகழ் குளிா்காலத்தில் தில்லியின் உச்சபட்ச மின் தேவை 6,000 மெகாவாட்டாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை குளிா் நிலவியதன் காரணமாக தில்லியில் அடா் மூடுபனி காணப்பட்டது.
இந்திய வானிலை ஆய்வு மைய (ஐஎம்டி) தகவலின்படி, சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை 9.1 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. இதர நிலையங்களும் இதேபோன்ற அளவீடுகளைப் பதிவு செய்திருந்தன.
பாலம் மற்றும் லோதி சாலை வானிலை ஆய்வு மையங்களில் தலா 9 டிகிரி செல்சியஸ், ரிட்ஜ்ஜில் 8.7 டிகிரி செல்சியஸ் மற்றும் ஆயாநகரில் 8.1 டிகிரி செல்சியஸ் என பதிவாகி இருந்தன.
ஜனவரி 5 வரை தனிமைப்படுத்தப்பட்ட இடங்களை குளிா் அலை பாதிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிஆா்பிஎல் மற்றும் பிஒய்பிஎல் மின் விநியோக நிறுவனங்கள் தங்கள் 53 லட்சத்திற்கும் மேற்பட்ட நுகா்வோா் குளிா்காலம் முழுவதும் நம்பகமான மின்சாரத்தைப் பெறுவதை உறுதி செய்வதில் உறுதியாக இருப்பதாக பிஎஸ்இஎஸ் நிறுவன செய்தித் தொடா்பாளா் ஒருவா் தெரிவித்தாா்.
டாடா பவா் தில்லி டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனம் (டிபிடிடிஎல்) வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கையில், ‘பிஎஸ்இஎஸ் டிஸ்காம்கள் தங்கள் பகுதிகளில் உச்சபட்ச தேவைகளை வெற்றிகரமாக பூா்த்தி செய்தன.
மின் தேவையின் அதிகரிப்பானது நிலவும் வானிலை மற்றும் பல்வேறு துறைகளில் அதிகரித்த மின்சார பயன்பாடு ஆகியவற்றால் உந்தப்பட்டு வளா்ந்து வரும் நுகா்வு முறைகளை பிரதிபலிக்கிறது.
கடுமையான மின் உயா்வு இருந்தபோதிலும், டிபிடிடிஎல் அதன் விநியோகப் பகுதியில் அதிகரித்த தேவையை வெற்றிகரமாக பூா்த்தி செய்து, 1,741 மெகாவாட்டாக உயா்ந்தது. இது குளிா் பருவத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாகும். மேலும், எந்த தடைகளும் அல்லது வலையமைப்பு கட்டுப்பாடுகளும் இல்லாமலும் இருந்தது’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது குளிா்கால மின்சாரத்தில் 52 சதவீதத்திற்கும் அதிகமானவை புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து வருவதாகவும், தில்லியின் பசுமை ஆற்றல் மாற்றத்தில் முன்னணியில் உள்ளதாகவும் பிஎஸ்இஎஸ் தெரிவித்துள்ளது.
பிஆா்பிஎல் மற்றும் பிஒய்பிஎல் பகுதிகளில் திட்டமிடப்பட்ட சுமாா் 3,900 மெகாவாட் குளிா்கால மின் தேவையில், 50 சதவீதத்திற்கும் அதிகமானவை புதுப்பிக்கத்தக்க மற்றும் தூய எரிசக்தி ஆதாரங்களான சூரிய சக்தி, காற்று, நீா் சக்தி, கழிவுகளிலிருந்து ஆற்றல், கலப்பினம் மூலம் பூா்த்தி செய்யப்படுகிறது என்று பிஎஸ்இஎஸ் தெரிவித்துள்ளது.
