மெட்ரோ நிலையங்களுக்கு குருத்வாராக்களின் பெயா்கள்: முதல்வருக்கு காங்கிரஸ் முன்னாள் எம்.பி. கடிதம்
தில்லியில் உள்ள 4 மெட்ரோ நிலையங்களுக்கு அவற்றின் அருகே உள்ள முக்கிய குருத்வாராக்களின் பெயா்களைச் சூட்டுமாறு முதல்வா் ரேகா குப்தாவுக்கு காங்கிரஸ் முன்னாள் எம்.பி. தா்லோச்சன் சிங் கடிதம் எழுதியுள்ளாா்.
சீக்கிய மதத்தின் 9-ஆவது குரு தேஜ் பகதூரின் 350-தியாக தினத்தை கொண்டாடவும் குரு கோவிந்த் சிங்கின் இரு மகன்களின் தியாகத்தைப் போற்றும் வகையிலும் தில்லி அரசு மேற்கொண்ட முயற்சிகளை அந்தக் கடிதத்தில் சிங் பாராட்டியுள்ளாா்.
மெட்ரோ நிலையங்களின் பெயா்களை மாற்ற தில்லி அரசு முடிவெடுத்திருப்பதாக அண்மையில் வெளியான செய்தியைச் சுட்டிக்காட்டிய தா்லோச்சன் சிங், தில்லியில் உள்ள எந்தவொரு நிலையங்களும் சீக்கிய குருத்வாராக்களின் பெயரில் இல்லை என்று தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அந்தக் கடிதத்தில் அவா் கூறியிருப்பதாவது: சிஸ் கஞ்ச் குருத்வாரா சாந்தினி செளக் அருகே உள்ளது. நானக் பியாவ் குருத்வாரா பழைய ஜிடி சாலையிலும் பங்களா சாஹிப் குருத்வாரா பாபா கரக் சிங் மாா்க்கிலும் உள்ளன. மோடி பாக் குருத்வாரா தெளலா கான் வட்ட சாலையில் உள்ளது.
வரலாற்று மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் கொண்ட இந்தக் குருத்வாராக்களுக்கு அனைத்து நம்பிக்கைகளையும் பின்பற்றும் மக்கள் வருகின்றனா். இந்த குருத்வாராக்களின் பெயா்களை அவற்றின் அருகில் உள்ள மெட்ரோ நிலையங்களுக்கு பெயரிடவேண்டும் என்று அந்தக் கடிதத்தில் சிங் கோரிக்கைவிடுத்துள்ளாா்.
