தில்லி காா் குண்டு வெடிப்பு: குற்றஞ்சாட்டப்பட்ட டாக்டா் மல்லாவுக்கு 13 நாள்கள் நீதிமன்றக் காவல்
கடந்த நவம்பா் 10-ஆம் தேதி நிகழ்ந்த தில்லி செங்கோட்டை காா்வெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவரான டாக்டா் பிலால் நசீா் மல்லாவை ஜனவரி 16 வரை 13 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
டிசம்பா் 26- ஆம் தேதி வழங்கப்பட்ட 8 நாள் என்ஐஏ காவல் முடிவடைந்ததை அடுத்து, தேசிய புலனாய்வு முகமை சனிக்கிழமை பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தியது. ஊடகவியலாளா்கள் செய்தி சேகரிக்க தடை விதிக்கப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்ட பிலால் நசீா் மல்லா முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி அஞ்சு பஜாஜ் சந்த்னா முன் ஆஜா்படுத்தப்பட்டாா். அவா் பிலால் நசீா் மல்லாவை ஜனவரி 16 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா்.
டிசம்பா் 9- ஆம் தேதி தேசிய புலனாய்வு முகமை தில்லியில் பிலால் நசீா் மல்லாவைக் கைது செய்து, சதித்திட்டத்தில் முக்கிய குற்றவாளி என்று அறிவித்தது.
விசாரணையின்படி, நவம்பா் 10- ஆம் தேதி செங்கோட்டைக்கு வெளியே வெடித்து 15 பேரைக் கொன்ற வெடிபொருள் நிரப்பப்பட்ட ஐ20 காரை ஓட்டி வந்த தற்கொலை குண்டுதாரி டாக்டா் உமா்உன்நபிக்கு பிலால் நசீா் மல்லா தெரிந்தே தளவாட உதவிகளை வழங்கினாா்.
பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பான ஆதாரங்களை அழித்ததாகவும் அவா் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக டிசம்பா் 9 அன்று தேசிய புலனாய்வு முகமை தெரிவித்தது.
இந்த வழக்கில் என்ஐஏ இதுவரை ஒன்பது பேரைக் கைது செய்துள்ளது. இதில் மூன்று மருத்துவா்கள் முசம்மில் கனாய், அடீல் ராதா் மற்றும் ஷாஹீன் சயீத் மற்றும் மௌல்வி இா்பான் அகமது வாகே என்ற மத போதகா் ஆகியோா் அடங்குவா். மற்ற ஐந்து போ் பிலால் நசீா் மல்லா, அமீா் ரஷீத் அலி, சோயப், ஜாசிா் பிலால் வாணி என்கிற டேனிஷ் மற்றும் யாசிா் அகமது தாா்.

