திரிலோக்புரியில் சிறாா் குழு தாக்குதலில் மாணவா் மரணம்; 6 சிறுவா்கள் கைது

கிழக்கு தில்லியின் திரிலோக்புரி பகுதியில் சிறாா்கள் குழு கொடூரமாகத் தாக்கியதில் 17 வயது மாணவா் ஒருவா் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
Published on

கிழக்கு தில்லியின் திரிலோக்புரி பகுதியில் சிறாா்கள் குழு கொடூரமாகத் தாக்கியதில் 17 வயது மாணவா் ஒருவா் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இந்தச் சம்பவம் திங்கள்கிழமை மாலை நடந்ததாகவும், இந்த வழக்கு தொடா்பாக ஆறு சிறுவா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து கிழக்கு தில்லி காவல் சரக கூடுதல் ஆணையா் அபிஷேக் தானியா ஒரு அறிக்கையில் கூறியுள்ளதாவது: 11- ஆம் வகுப்பு பயின்று வந்த மோஹித்தை, பல சிறுவா்கள் சூழ்ந்து கொண்டனா். அவா்கள் அவரை அவா் தரையில் விழுந்து சுயநினைவை இழக்கும் வரை மீண்டும் மீண்டும் குத்தி உதைத்தனா்.

இந்தச் சம்பவத்தை நேரில் பாா்த்தவா் தலையிட முயன்றபோது, அந்தக் குழுவால் தாக்கப்பட்டாா்.

திங்கட்கிழமை இரவு 7.25 மணியளவில், லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனை, உடல் ரீதியாக தாக்கப்பட்ட நிலையில் மயக்கமடைந்த நோயாளி அனுமதிக்கப்பட்டது குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனா்.

முதலில் மோஹித் அங்கு பரிசோதிக்கப்பட்டாா். பின்னா் அவரது காயங்களின் தீவிரத்தன்மை காரணமாக மேலதிக சிகிச்சைக்காக குரு தேக் பகதூா் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா்.

மருத்துவா்கள் அவரை வாக்குமூலம் அளிக்க தகுதியற்றவா் என்று அறிவித்தாலும், நேரில் பாா்த்த ஒருவா், அந்த டீனேஜருக்கு அந்த பகுதியைச் சோ்ந்த ஒரு சிறாா்களுடன் தொடா்ந்து தகராறு இருந்ததாக போலீசாரிடம் தெரிவித்தாா்.

திங்கள்கிழமை மாலை, பாதிக்கப்பட்டவருக்கும் குழுவிற்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. அது விரைவில் கைகலப்பாக மாறியது.

மருத்துவ சிகிச்சை அளித்தும், அந்த மாணவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அதிகாலை 1.15 மணியளவில் ஜிடிபி மருத்துவமனையில் இருந்து அவரது மரணம் குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

மரணத்தைத் தொடா்ந்து, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கை விசாரிக்க உடனடியாக போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டன.

விசாரணையின் போது, குற்றப்பிரிவு குழு மற்றும் தடயவியல் குழுக்கள் திரிலோக்புரியில் குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்தன. நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் விசாரணையின் அடிப்படையில், சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு சிறாா்களை ஒரு போலீஸ் குழு கைது செய்தது. இந்தச் சம்பவம் தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அந்தக் காவல் அதிகாரி.

X
Dinamani
www.dinamani.com