நமது நிருபர்
திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டதன் மூலம் முருக பக்தர்களுக்கு நீதி கிடைத்துள்ளது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.
தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சரும், தமிழகத்துக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: முருகப்பெருமான் வீற்றிருக்கும் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது ஒரு பழங்கால வழக்கம் என்று இரண்டு நீதிபதிகளும் திட்டவட்டமான உத்தரவை வழங்கியுள்ளனர். இது ஹிந்து மதம் மற்றும் உள்ளூர் மக்களின் உணர்வுகள் தொடர்பான ஒரு விஷயம். இந்த வழக்கம் பல நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது.
இந்த உத்தரவு, தமிழகத்தில் உள்ள திமுக அரசு, முதல்வர் மு.க. ஸ்டாலின், அவரது மகனும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் மற்றும் அனைத்து இண்டி கூட்டணிக் கட்சிகளின் முகத்திரையைத் கிழித்துள்ளது.
ஹிந்துக்களுக்கு எதிரான கருத்துகளை திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர். அதேவேளையில், பாஜக எப்போதும் தேசத்தின் மதச்சார்பின்மைத் தன்மையைப் பேணிக்காக்கவும், திருப்திப்படுத்தும் கொள்கைக்கு எதிராகவும் போராடும்.
ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தும் எந்தவொரு முயற்சியையும் பாஜக பொறுத்துக்கொள்ளாது.
சமீபத்திய பிகார் தேர்தலிலும், மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. தென் மாநில மக்கள் திமுகவுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றார் அவர்.
மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி: மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷண் ரெட்டி தனது "எக்ஸ்' பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பு, தமிழ்நாட்டில் காங்கிரஸ் - திமுக கூட்டணியின் சநாதன தர்ம எதிர்ப்பு நிலைப்பாட்டையும், சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்துவதற்காக அவை எந்த எல்லைக்கும் செல்லும் என்பதையும் ஒரே நேரத்தில் அம்பலப்படுத்தியிருக்கிறது. அந்தக் கூட்டணியை மக்கள் கடுமையாகத் தண்டிப்பார்கள் என்று கூறியுள்ளார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்: உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பு, தமிழக அரசுக்கும், அறநிலையத் துறைக்கும் குட்டு வைக்கும் விதமாக அமைந்துள்ளது. இதற்குப் பிறகாவது ஆட்சி அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்துவதை விடுத்து, ஆண்டுதோறும் கார்த்திகை தீப நாளன்று தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை திமுக அரசு பின்பற்ற வேண்டும்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: தீபத்தூணில் தீபமேற்றுவதை உறுதிசெய்துள்ள இந்த தீர்ப்புக்கு பிறகும் திமுக அரசு மேல்முறையீடு செய்வோம் என அறிவித்துள்ளது, அதன் தமிழர் பண்பாட்டு விரோதப் போக்கை தெளிவாக வெளிப்படுத்துகிறது. தீபத்தூணில் தீபமேற்றும் நாளும், திமுக அரசு தமிழகத்தில் இருந்து அகற்றப்படும் நாளும் தொலைவில் இல்லை.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று உத்தரவு பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது. சட்டம்-ஒழுங்கு பிரச்னை எழாதபோது அதுகுறித்து மக்களிடையே தமிழக அரசு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டான தீர்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.