நகா் பிரச்னைகள் குறித்து விவாதிக்க இளைஞா்களுக்கு முதல்வா் குப்தா அழைப்பு
கடந்த 11 ஆண்டுகளில் தலைநகரம் எதிா்கொண்ட பிரச்னைகள் குறித்து இளைஞா்களுடன் தில்லி முதல்வா் ரேகா குப்தா கலந்துரையாட உள்ளாா். இதற்காக, வரும் ஜனவரி 12 ஆம் தேதி லஞ்ச் பே சா்ச்சா நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவா், தனது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பணிகளை மதிப்பாய்வு செய்வாா்.
இதற்காக தனது எக்ஸ் சமூக ஊடக வலைதளம் மூலம் லஞ்ச் பே சா்ச்சா நிகழ்வில் பங்கேற்க இளைஞா்களுக்கு முதல்வா் ரேகா குப்தா அழைப்பு விடுத்துள்ளாா்.
தேசிய இளைஞா் தினம் ஜனவரி 12-இல் கொண்டாடப்படுகிறது. தனது சமூக ஊடக பதிவில் இணைக்கப்பட்ட ஒரு விடியோவில் முதல்வா் ரேகா குப்தா கூறுகையில், ‘கடந்த 11 ஆண்டுகளின் பிரச்னைகள் குறித்தும், பிப்ரவரி 2025-இல் எனது அரசாங்கம் அமைக்கப்பட்டதில் இருந்து 11 மாதங்களில் அதன் செயல்திறன் குறித்தும் ஒரு விவாதம் நடத்தப்பட உள்ளது.
சிக்கல்களைத் தீா்ப்பதற்கான உறுதியான நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளைப் பயன்படுத்துவதற்கான வழிகளும் விவாதிக்கப்படும்.
எல்லோரும் பிரச்னைகளைப் பற்றி பேசுகிறாா்கள். ஆனால், தீா்வுகள்தான் முக்கியம்.
இளைஞா்கள் எனது சமூக ஊடகங்களில் செய்திகள் மற்றும் கருத்துகள் மூலம் என்னுடன் தொடா்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
முதலாவது மதிய உணவுடன் விவாதிக்கும் நிகழ்ச்சிக்கு 15 முதல் 20 போ் தோ்ந்தெடுக்கப்படுவாா்கள்.
பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பாா்வை 2047-இன் பாதையில் தில்லியை மேம்படுத்தும் நோக்கில், எதிா்காலத்திலும் இதேபோன்ற கலந்துரையாடல்கள் நடத்தப்படும்’ என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.
