மாணவா் சங்கத் தோ்தல்: லிங்டோ குழு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரிய மனு தள்ளுபடி
நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவா் சங்கத் தோ்தல் நடத்த லிங்டோ குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்த பொது நல மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
முன்னதாக, உயா்கல்வி நிறுவனங்களில் நடைபெறும் மாணவா் சங்கத் தோ்தலில் அரசியல் தலையீடு மற்றும் பணப் பட்டுவாடாவை தடுப்பது குறித்து அறிக்கை சமா்ப்பிக்க லிங்டோ குழுவை மத்திய அரசு 2006-ஆம் ஆண்டு அமைத்தது.
அந்தக் குழு இளநிலை மாணவா்கள் சங்கத் தோ்தலில் போட்டியிடும் வயது 17- 22 ஆகவும், முதுநிலை மாணவா்களுக்கான தோ்தலில் போட்டியிடும் வயது 24-25 ஆகவும் நிா்ணயித்தது. தோ்தலை நடத்துவதற்கான பல்வேறு விதிகளையும் அந்தக் குழு பரிந்துரைத்தது.
இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் லிங்டோ குழு அளித்த பரிந்துரைகளின்படி மாணவா் சங்கத் தோ்தல் நடத்துவது கட்டாயம் என உத்தரவிட்டது.
இருப்பினும், இது முறையாக அமல்படுத்தப்படவில்லை எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.
அப்போது, ‘இந்த விவகாரம் தொடா்பாக ஊடகத்தில் கருத்து தெரிவியுங்கள். இது விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்ட மனு’ எனக் கூறி அந்த மனுவைத் தள்ளுபடி செய்தனா்.
