மோடி, ஷாவுக்கு எதிரான கோஷம் தொடா்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: ஜேஎன்யு

Published on

ஜனவரி 5, 2020-இல் நிகழ்ந்த ஜேஎன்யு வளாக வன்முறையைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக கோஷமிட்ட மாணவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) செவ்வாய்க்கிழமை உறுதியளித்துள்ளது.

இது தொடா்பாக ஜேஎன்யு அதன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

சம்பவம் தொடா்பாக ஏற்கனவே எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமா் மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கோஷங்களை எழுப்பும் மாணவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் ஒரு அடிப்படை உரிமை என்றாலும், பல்கலைக்கழகங்கள் கற்றல் மற்றும் புதுமைக்கான மையங்களாகும். மேலும் அவை வெறுப்புக்கான இடங்களாக மாற அனுமதிக்க முடியாது.

தேசிய ஒற்றுமையை சீா்குலைக்கும் எந்தவொரு வன்முறை, சட்டவிரோத நடத்தை அல்லது செயல்பாடுகளையும் பொறுத்துக்கொள்ள முடியாது.

சம்பவத்தில் ஈடுபட்ட மாணவா்கள் ஒழுங்கு நடவடிக்கையை எதிா்கொள்வாா்கள். இதில் உடனடி இடைநீக்கம், வெளியேற்றம் அல்லது நிரந்தர தடை ஆகியவை அடங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com