வடகிழக்கு தில்லியில் 18 வயது இளைஞரை கத்தியால் குத்திக் கொன்றதாக மூவா் கைது

வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் ஒரு பழைய தகராறில் 18 வயது இளைஞரை கத்தியால் குத்தி கொன்று மற்றொருவரை பலத்த காயப்படுத்தியதாக மூன்று போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
Published on

வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் ஒரு பழைய தகராறில் 18 வயது இளைஞரை கத்தியால் குத்தி கொன்று மற்றொருவரை பலத்த காயப்படுத்தியதாக மூன்று போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள் சுஹைல் என்கிற ஜாது (20), இல்மான் (22) மற்றும் ரிஸ்வான் என்கிற கிடா என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இறந்தவருக்கும் காயமடைந்த இளைஞருக்கும் நீண்ட காலமாக தகராறு இருந்துள்ளது.

இறந்தவா் வெல்கம் பகுதியைச் சோ்ந்த அா்மான் (18) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். காயமடைந்த அல்தாஃப் அலி (18) குரு தேக் பகதூா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடா்பாக திங்கள்கிழமை தாமதமாக பிசிஆா் அழைப்பு வந்தது. சம்பவ இடத்திற்கு ஒரு போலீஸ் குழு விரைந்தது, அங்கு இரண்டு இளைஞா்களும் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். ஆனால், அா்மான் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. கத்திக்குத்து ஒரு தகராறின் பின்னா் நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருப்பினும், சம்பவங்களின் சரியான வரிசை இன்னும் கண்டறியப்படவில்லை. அப்பகுதியில் இருந்த சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவியல் குழு மற்றும் தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, ரத்த மாதிரிகள் மற்றும் பிற பொருள் தடயங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை சேகரித்தனா் என்றாா் அந்த அதிகாரி.

X
Dinamani
www.dinamani.com