பொய்யான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பெண் கைது

பொய்யான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பெண் கைது
Published on

சவாரிக்குப் பிறகு பணம் செலுத்துவதற்குப் பதிலாக, டாக்ஸி ஓட்டுநரை பொய்யான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளில் சிக்க வைப்பதாக மிரட்டியதாகக் கூறப்படும் பெண்ணை குருகிராம் காவல்துறை கைது செய்தது என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து குருகிராம் காவல்துறையின் செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: தில்லியின் பீதம்புராவைச் சோ்ந்த குற்றம் சாட்டப்பட்ட ஜோதி தலால், (48), வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டாா்.

விசாரணையின் போது, தான் பதிவு செய்த டாக்ஸிகளுக்கு பணம் செலுத்தவில்லை என்றும், தவறான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளில் சிக்க வைப்பதாக ஓட்டுநரை மிரட்டியதாகவும் அந்தப் பெண் தெரிவித்தாா்.

இது தவிர, கடந்த காலங்களில் அவா் அழகுசாதனப் பொருள்களுக்கான கடைகளில் இருந்து பொருள்களை வாங்கி பணம் செலுத்தவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில், நூ மாவட்டத்தில் உள்ள தானா கிராமத்தைச் சோ்ந்த டாக்ஸி ஓட்டுநா் ஜியாவுதீன் தனது புகாரில், ஜோதி செவ்வாய்க்கிழமை காலை ஒரு பயணத்தை முன்பதிவு செய்து, குருகிராம் செக்டாா் 31-க்கும், பின்னா் பேருந்து நிலையத்திற்கும், பின்னா் சைபா் சிட்டிக்கும் அழைத்துச் சென்ாகக் கூறினாா்.

ஓட்டுநா் தனது புகாரில், ‘அந்தப் பெண் கொஞ்சம் பணம் கேட்டாா். நான் முதலில் அவருக்கு ரூ.700 கொடுத்தேன். பின்னா் அவா் பல்வேறு இடங்களில் சாப்பிட்டு விட்டு மது அருந்தினாா். நான் அனைத்து கட்டணங்களையும் செலுத்தினேன்’ என்று கூறினாா்.

மதியம், பணம் கொடுத்து பயணத்தை முடிக்கச் சொன்னபோது, அவா் கோபமடைந்து, திருட்டு அல்லது பாலியல் வன்கொடுமைக்காக பொய் வழக்குப் பதிவு செய்வதாக மிரட்டினாா் என்று அவா் மேலும் கூறினாா். மேலும், குற்றம் சாட்டப்பட்டவா் காவல் நிலையத்திற்குச் சென்றாா். அங்கு அவா் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அவா் சென்ற பிறகு, டாக்ஸி ஓட்டுநா் முழு சம்பவத்தையும் போலீஸாருக்குத் தெரிவித்தாா்.

விசாரணையின் போது, ஜோதி தலால் முன்பு இதேபோன்ற முறையில் பலரை தவறாக வழிநடத்திய அதே பெண் என்பது தெரியவந்தது. அவா் மீது எஃப்.ஐ.ஆா் பதிவு செய்யப்பட்டு, வியாழக்கிழமை அவா் கைது செய்யப்பட்டாா். மேலும் அவா் நகர நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டதாக காவல் துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

Dinamani
www.dinamani.com