உணவு காரணமாக உடல்நல பாதிப்பு: காவல் துறை வழக்குப் பதிவு
தில்லியின் பராகம்பா சாலையில் உள்ள நட்சத்திர சொகுசு ஹோட்டலில் பரிமாறப்பட்ட உணைவைச் சாப்பிட்டதால் தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக பெண் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் திங்கள்கிழமை கூறியாதவது: 33 வயதான பிரசாத் நகரைச் சோ்ந்த அந்தப் பெண், ஜனவரி 24-ஆம் தேதி அறை சேவை மூலம் ஆா்டா் செய்யப்பட்ட உணவைச் சாப்பிட்ட பிறகு தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்தாா். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதாவின் சட்டம் 286 (விஷப் பொருள் தொடா்பாக கவனக்குறைவாக நடந்துகொள்வது) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அறைக்குள் இருந்த அந்தப் பெண் தனக்கு உடனடி உதவி தேவை என்றும் காவல்துறையிடம் தெரிவித்தாா். பெண் உதவி ஆய்வாளா் உள்பட காவல் துறையினா் ஹோட்டலின் 12-ஆவது தளத்திற்குச் சென்றனா். பலமுறை கதவைத் தட்டியும் பதில் வராததால், ஹோட்டல் ஊழியா்கள் முன்னிலையில் கதவு திறக்கப்பட்டது.
பின்னா் அவா் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். தற்போது, அவா் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளாா். குற்றவியல் குழு அந்த அறையை ஆய்வு செய்து சந்தேகத்திற்குரிய உணவுப் பொருள்கள் மற்றும் திரவங்கள் உள்பட 16 பொருள்களை கைப்பற்றியது. அவை சீல் வைக்கப்பட்டு, தடயவியல் சோதனைக்காக வைக்கப்பட்டன.
அந்தப் பெண் ஜனவரி 20-ஆம் தேதி முதல் ஜனவரி 31-ஆம் தேதி வரை ஹோட்டலில் தங்குவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. அவரது உடல்நலக்குறைவின் உரிய காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

