கோப்புப்படம்
கோப்புப்படம்

தலைநகரில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தலைநகரில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு...
Published on

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) அன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

வெப்பநிலை: தலைநகரில் சனிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 6.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இது பருவத்தின் சராசரியை விட 1.7 டிகிரி குறைவாகும். அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 0.8 டிகிரி குறைந்து 21.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 62 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள் காட்டுகின்றன.

நிலைய வாரியான தரவுகளின் படி பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 8.1 டிகிரி செல்சியஸ், லோதி சாலையில் 7.1 டிகிரி, ரிட்ஜில் 7.7 டிகிரி, ஆயாநகரில் 6.6 டிகிரி செல்சியஸ் என பதிவாகியுள்ளது. நகரத்தின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் இரவு வெப்பநிலை 6.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.

காற்றின் தரம்: சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 278 புள்ளிகளாகப் பதிவாகி ’மோசம்’ பிரிவில் இருந்தது என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவு காட்டுகிறது.

இதற்கிடையே, தில்லியில் காற்றின் தரம் கடந்த ஆண்டை விட இந்த ஜனவரி மாதம் சற்று மோசமடைந்துள்ளது. ஜனவரி 30 வரையிலான சராசரி காற்று தரக் குறியீடு 307 புள்ளிகளாப் பதிவாகியுள்ளது. இது 2025- ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 306 புள்ளிகளாக இருந்தது என்று பகுப்பாய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அதே சமயம், ஜனவரி 2026 இப்போது இரண்டாவது சிறந்த ஜனவரி மாதமாக உள்ளது. ஜனவரி 2026- இல் இதுவரை, தில்லியில் இரண்டு ‘மிதமான’ காற்றுத் தரம் நாள்கள், 12 ‘மோசமான’ நாள்கள், 14 ‘மிகவும் மோசம்’ நாள்கள் மற்றும் இரண்டு ‘கடுமையான’ நாள்கள் பதிவாகியுள்ளதாக பகுப்பாய்வு காட்டுகிறது.

ஒப்பிடுகையில், ஜனவரி 2025-இல் இரண்டு ‘மிதமான’ நாள்கள், 13 ‘மோசமான’‘ நாள்கள் மற்றும் 16 ‘மிகவும் மோசமான’ நாள்கள் திவாகியுள்ளன. மாதத்தில் ‘கடுமையான’ காற்றுத் தரம் நாள்கள் எதுவும் பதிவாகவில்லை.

ஜனவரி 2025 இல் ‘கடுமையான’ நாள்கள் இல்லாததும், இந்த ஆண்டு ஜனவரியில் இரண்டு ‘கடுமையான‘ நாள்கள் இருப்பதும் 2026- இல் சராசரி காற்றுத் தரக் குறியீடு சற்று அதிகமாக இருப்பதற்கு பங்களித்திருக்கலாம் என்று பகுப்பாய்வு சுட்டிக்காட்டியது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) காலை வேளையில் மிதமான மூடுபனி இருக்கும் என்றும், அதைத் தொடா்ந்து, இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது சுமாா் 30-40 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Dinamani
www.dinamani.com