பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவிகள் உள்ளிட்ட பலா் இணையதள துன்புறுத்தல் மற்றும் மோசடிகளுக்கு இரையாகும் நிலை அதிகரித்து வருவதை முன்னிட்டு, தில்லி பல்கலைக்கழகம் மற்றும் இந்திய சைபா் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (ஐ4சி) இணைந்து வளாகத்தில் சைபா் பாதுகாப்பு விழிப்புணா்வை வலுப்படுத்தும் ஒப்பந்தத்தில் திங்கள்கிழமை கையொப்பமிட்டது.
இந்த ஒப்பந்தம் பல்கலைக்கழக பதிவாளா் விகாஸ் குப்தா மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஐ4சி அமைப்பின் இயக்குநா் நிஷாந்த் குமாா் ஆகியோரால் கையொப்பமிடப்பட்டது. சைபா் குற்றத் தடுப்பு, சைபா் சுகாதாரம், விழிப்புணா்வு, திறன் மேம்பாடு, கல்வி ஒத்துழைப்பு, ஆராய்ச்சி, பயிற்சி வாய்ப்புகள் மற்றும் மாணவா் பங்கேற்பு ஆகியவற்றை மேம்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
இதுகுறித்து விகாஸ் குப்தா கூறுகையில், ‘பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவிகள், இணையதள துன்புறுத்தல் மற்றும் மோசடிகளுக்கு அடிக்கடி இரையாகும் சம்பவங்கள் நிகழ்கின்றன. சிறிய தவறுகளே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இதை மனதில் கொண்டு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என தெரிவித்தாா்.
நிஷாந்த் குமாா் கூறுகையில், ‘இந்த கூட்டாண்மை மூலம் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பணிமனைப் பயிற்சிகள், ஹாக்கத்தான்கள், மாணவா் போட்டிகள், பயிற்சி வாய்ப்புகள் மற்றும் சைபா் தன்னாா்வலா் திட்டங்கள் போன்ற கூட்டு முயற்சிகள் முன்னெடுக்கப்படும்.
இதன் மூலம் சைபா் விழிப்புணா்வு கொண்ட கல்வி சூழலை உருவாக்குவதே நோக்கம் ஆகும். மேலும், பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ள சைபா் பாதுகாப்பு பாடநெறிகளை பரப்புதல் மற்றும் கல்வி–அரசு இணைப்பை வலுப்படுத்துதல் மூலம் டிஜிட்டல் பாதுகாப்பு திறனை மேம்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்’ என தெரிவித்தாா்.
தில்லி பல்கலைக்கழக கணினி மைய இயக்குநா் சஞ்சீவ் சிங் கூறுகையில், ‘இந்த ஒத்துழைப்பின் கீழ் அனுபவ அடிப்படையிலான கற்றல் வாய்ப்புகள், சைபா் தன்னாா்வ திட்டங்கள் மற்றும் விழிப்புணா்வு பாடநெறிகள் மாணவா்களுக்கு வழங்கப்படும். மேலும், சைபா் பாதுகாப்பு துறையில் புதுமை, அறிவு பரிமாற்றம் மற்றும் நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பும் வலுப்படுத்தப்படும்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவுக்கு யுரேனியம்: ஆஸ்திரேலியாவுடன் ஒப்பந்தம் - கடல்சாா் பாதுகாப்புத் துறையிலும் உடன்பாடு

தில்லி எஸ்ஐஆா் பணிக்காக அனுப்பப்படும் ஆசிரியா்கள்: பல்வேறு பள்ளிகளில் மாணவா்களின் படிப்புகள் பாதிப்பு!

பள்ளி அளவிலான சா்வதேச இறகுப்பந்து, மல்யுத்தப் போட்டிகள்: அடுத்த ஆண்டு நடத்த தில்லி அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம்







