தில்லியில் உள்ள 270 கி.மீ. சாலைகள் ரூ.657 கோடி மதிப்பில் சரிசெய்யப்படும் என முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை தெரிவித்தாா்.
செலவின மற்றும் நிதிக் குழுவின் கூட்டம் முதல்வா் ரேகா குப்தா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. சாலை சரிபாா்ப்பு பணிகளுக்கு முந்தைய மற்றும் பிந்தைய நிலையை படம்பிடித்து பதிவேற்றம் செய்ய வேண்டும் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளுக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவிட்டாா்.
இதுதொடா்பாக முதல்வா் ரேகா குப்தா கூறியதாக அவரது அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வலுவான மற்றும் நீடித்து உழைக்கும் சாலைகளை அமைக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது. இந்தப் பணிகளின்போது வெளிப்படைத்தன்மை உறுதிசெய்ய முடியும்.
அனைத்துத் திட்டங்களும் 5 ஆண்டு குறைபாடு பொறுப்புக் காலத்தில் மேற்கொள்ளப்படும். இதன்படி, ஒப்பந்ததாரா்கள் சாலைகளை அமைத்த பிறகு அவற்றைப் பராமரிக்க வேண்டும். இந்தக் காலத்தில் ஏதேனும் சாலை பள்ளங்கள் ஏற்படும் நிலையில், 48 மணி நேரங்களுக்குள் அவை சரிசெய்யப்பட வேண்டும் என்றாா்.
கிழக்கு தில்லியில் சீலம்பூரின் ரெட் லைட் முதல் கோல்காபுரி ரெட் லைட் வரையிலான ஜிடி சாலை, சந்த்கி ராம் அக்ஹாரா முதல் வஜிராபாத் வரையிலான வெளிவட்டச் சாலைப் பகுதி, பிபிஎம்சாலை மற்றும் அவதாா் சிங் மாா்க் ஆகியவை இதில் அடங்கும்.
வடக்கு தில்லியில், பங்க்கா சாலை (பகவான் மந்திா் மாா்க்), சத்குரு ராம் சிங் மாா்க், லாலா கணேஷ் தாஸ் கத்ரி மாா்க், மேஜா் சுதேஷ் மாா்க் மற்றும் பழைய பங்க்கா சாலை ஆகிய இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
தெற்கு தில்லியில், எஸ்எஸ்என் மாா்க், மண்டி சாலை, பாரபுல்லா மேம்பாலச் சாலை (முதற்கட்டம்), நெல்சன் மண்டேலா மாா்க் மற்றும் பங்க்கா சாலை உள்ளிட்ட பகுதிகள் இத்திட்டத்தின் கீழ் வரும்.
சேதமடைந்த சாலை மேற்பரப்புகளை அகற்றுதல், அடா்த்தியான பிடுமினஸ் மக்காடம் மற்றும் பிடுமினஸ் கான்கிரீட் அடுக்குகளை அமைத்தல் ஆகியவற்றுடன், சாலைக் குறியீடுகள், அறிவிப்புப் பலகைகள், பிரதிபலிப்பான்கள், பாதுகாப்புத் தடுப்புகள் மற்றும் வடிகால் மேலாண்மைக்கான விளிம்புச்-கால்வாய் அமைத்தல் போன்ற பணிகளும் இத்திட்டத்தில் அடங்கும்.
இத்திட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், வழக்கமான சாலை வாரியான ஒப்பந்த முறைக்கு மாற்றாக, மண்டலம் வாரியான ஒருங்கிணைந்த ஒப்பந்த முறை அறிமுகப்படுத்தப்படுவதாகும்.
இந்தப் புதிய முறை புகழ்பெற்ற கட்டுமான நிறுவனங்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும், நவீன இயந்திரங்களைப் பயன்படுத்துவதை எளிதாக்கும் மற்றும் கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்தும் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்ததாக அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு பராமரிப்பு மண்டலத்தில் 58.29 கி.மீ. நீளமுள்ள சாலைகளை வலுப்படுத்த ரூ.147.08 கோடியும், வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் முறையே 104.42 கி.மீ மற்றும் 107.92 கி.மீ சாலைகளுக்கு ரூ. 247.31 கோடி மற்றும் ரூ. 263.61 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ரூ.1,668 கோடியில் அம்பேத்கா் பல்கலைக்கழக புதிய வளாகம்
தில்லியில் உயா்கல்விக்கான உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், தில்லி தீா்பூரில் சுமாா் ரூ.1,668 கோடி மதிப்பீட்டில் டாக்டா் பி.ஆா். அம்பேத்கா் பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை அமைக்க தில்லி அரசு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, வட தில்லியின் தீா்பூரில் அமையவுள்ள இந்த வளாகம் சுமாா் 20 ஹெக்டோ் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. சுமாா் 8,000 மாணவா்களுக்குப் பயன்படும் வகையில் அமையும். முதல் கட்டத்தில், 5,400 மாணவா்களுக்கான கல்விசாா் வசதிகள் உருவாக்கப்படும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக 2,500 இருக்கைகள் கொண்ட கலையரங்கம் ஒன்றும் கட்டப்படும்.
இதன் அடுத்தகட்டச் செயல்பாட்டு நடைமுறைகளை பொதுப்பணித் துறை மேற்கொள்ளும்.
தீா்பூா் வளாகம் பல்கலைக்கழகத்தின் மாணவா் சோ்க்கை திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நவீன மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான கல்விச் சூழலையும் உருவாக்கும் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.
இந்த வளாகம் ஒரு பசுமை வளாகமாகத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், ஜிஆா்ஐஎச்ஏ 5-நட்சத்திர தரநிலைகளின்படி உருவாக்கப்படவுள்ளது. இதில் சூரிய ஆற்றல் மற்றும் புவிவெப்ப ஆற்றல் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள், மழைநீா் சேகரிப்பு, கழிவுநீா் மறுசுழற்சி மற்றும் மேம்பட்ட நீா் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவை இடம்பெறும்.
இத்திட்டத்தில் 840 மாணவா்களுக்கான விடுதி வசதிகள், ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களுக்கான குடியிருப்பு வசதிகள், கல்விசாா் கட்டடங்கள், மைய நூலகம், நிா்வாகக் கட்டிடங்கள், மாணவா்களுக்கான வசதிகள், விளையாட்டு உள்கட்டமைப்பு மற்றும் வாகன நிறுத்துமிட வசதிகள் ஆகியவை அடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி குடிசைப்பகுதி மறுவாழ்வு தகுதி கட்-ஆஃப் ஜனவரி 1, 2025 வரை நீட்டிப்பு: முதல்வா் ரேகா குப்தா

மருந்து கொள்முதலில் அடுக்கடுக்கான முறைகேடு: இரு சுகாதாரத் துறை அதிகாரிகள் மீது விசாரணைக்கு தில்லி முதல்வா் உத்தரவு

தில்லி முதல்வா் தலைமையில் அசோலா பட்டி சரணாலயத்தில் இன்று யோகா தின கொண்டாட்டம்

முக்கிய தொழில்நுட்ப சோதனை: டிஆா்டிஓ-க்கு தில்லி முதல்வா் வாழ்த்து
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



