நெசவாளர் வாழ்வில் "இழையோடும்' சோகம்
அம்பாசமுத்திரம், ஜூலை 24: கைத்தறி நெசவுத் தொழில் நலிந்து வருவதால், நெசவுத் தொழிலாளர்கள் மாற்றுத் தொழில் தேடி இடம்பெயர்ந்து வருகின்றனர். தேசத்தந்தை மகாத்மா காந்தி கதராடை உடுத்தியதிலிரு


அம்பாசமுத்திரம், ஜூலை 24: கைத்தறி நெசவுத் தொழில் நலிந்து வருவதால், நெசவுத் தொழிலாளர்கள் மாற்றுத் தொழில் தேடி இடம்பெயர்ந்து வருகின்றனர்.
தேசத்தந்தை மகாத்மா காந்தி கதராடை உடுத்தியதிலிருந்தும், "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்' என்ற சொற்றொடரிலிருந்தும் கைத்தறியின் அருமை பெருமைகளை உணரலாம்.
ஆனால், அத்தகைய கைத்தறி நெசவுத் தொழில் இன்று சிறிது சிறிதாக அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு, மதுரை, கோவை, வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், செங்கல்பட்டு, கரூர், பவானி, சென்னிமலை ஆகிய இடங்களிலும் பெருமளவில் கைத்தறி தொழிலில் நெசவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் லுங்கி, சர்ட்டிங் துணிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பட்டுச்சேலை ரகங்கள், கரூர், ஈரோடு, பவானியில் உயர்தர பெட்ஷீட், ஏற்றுமதி ரகங்கள், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஈரிழை துண்டு, கலர் சீசன் துண்டுரகங்கள், மதுரை மாவட்டத்தில் செயற்கைப் பட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் வேஷ்டி போன்ற கைத்தறி துணி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஒருகாலத்தில் இத் தொழில் "ஓஹோ'வென இருந்ததால், பல லட்சம் கைத்தறி தொழிலாளர் குடும்பங்கள் தொழில்வாய்ப்பை பெற்று வந்தனர். ஆனால், இப்போதைய நிலையே வேறு...
தொழிலாளர்கள் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினராகச் சேர்ந்து, தொழில் செய்ய தேவையான கச்சாப் பொருள்களைப் பெற்று கைத்தறி துணிகளை உற்பத்தி செய்தனர்.
நெசவாளர்களுக்கு வாழ்வளிக்கும் வகையில், கைத்தறி துணி ரகங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் 20 சதவிகிதம் தள்ளுபடி மானியம் வழங்கி வந்தன. இதன்மூலம் குறைந்த விலையில் கைத்தறி துணிகள் கிடைத்தன.
நெசவாளர் சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி துணிகளை, தமிழக அரசின் கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்து விற்பனை செய்தது. இதனால், கைத்தறி நெசவுத் தொழில் வளமாக இருந்து வந்தது.
அரசின் சேமிப்பு பாதுகாப்புத் திட்டம், முதியோர் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலமும், சங்கங்களின் லாபத்தில் இருந்து போனஸ் போன்ற சலுகைகளாலும் நெசவாளர்கள் பயன் பெற்று வந்தனர்.
இந்நிலையில், கைத்தறி துணிகளுக்கு அரசு வழங்கி வந்த தள்ளுபடி மானியத் தொகை குறைக்கப்பட்டதால், கைத்தறி துணிகளின் விற்பனை குறைந்து, சங்கங்களில் துணிகள் பெருமளவில் தேக்கம் அடைந்தன. இதுதான் தொழில் நலிவடையத் துவங்கியதன் ஆரம்ப கட்டம். இதை ஆரம்பத்திலேயே கவனிக்காததால், கடந்த 10 ஆண்டுகளில் கைத்தறி நெசவுத் தொழில் நலிவடைந்து தற்போது அழியும் நிலையில் உள்ளது.
ஏற்கெனவே கைத்தறியில் உற்பத்தி செய்த ரகங்கள் தவிர, ஏற்றுமதி ரகங்களை உற்பத்தி செய்வதில் நெசவாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. மாறாக, விசைத்தறியில் கைத்தறி ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டதால், கைத்தறி துணி விற்பனையில் தேக்க நிலை அதிகரித்தது. மேலும், நெசவுத் தொழிலில் இன்றைய தலைமுறையினருக்கு ஆர்வம் இல்லை. பரம்பரை நெசவாளர் குடும்பங்களில்கூட இப்போதுள்ள இளைஞர்களுக்கு கைத்தறி எப்படி இருக்கும் என்பது தெரியாத நிலை. தொழிலைத் தொடர ஆள் இல்லாததாலும், போதிய வருமானம் கிடைக்காததாலும் நெசவாளர்கள் மாற்றுத் தொழிலைத் தேடிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது.
நெசவாளர் தெருக்களில் மீண்டும் கைத்தறி சப்தம் ஒலிக்க வேண்டுமானால், இத் தொழிலுக்குப் புத்துயிரூட்ட அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...