ஒளி இழக்கும் பித்தளை குத்துவிளக்கு தொழில்
அம்பாசமுத்திரம், அக். 18: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள வாகைக்குளத்தில் தயாரிக்கும் பித்தளை குத்துவிளக்குகள் புகழ்பெற்றுத் திகழ்ந்தாலும், மூலப்பொருட்களின் விலை உயர்வு, வேலையாட்க


அம்பாசமுத்திரம், அக். 18: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள வாகைக்குளத்தில் தயாரிக்கும் பித்தளை குத்துவிளக்குகள் புகழ்பெற்றுத் திகழ்ந்தாலும், மூலப்பொருட்களின் விலை உயர்வு, வேலையாட்கள் பற்றாக்குறை காரணமாக தொழில் நலிந்து வருகிறது.
தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் நாச்சியார்கோயில், கும்பகோணம் சுவாமிமலைக்கு அடுத்தபடியாக வாகைக்குளம் கிராமத்தில்தான் பித்தளை குத்துவிளக்குகள் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன.
இங்குள்ள கலைஞர்கள் சிலர் சுவாமி சிற்பங்கள் வடிப்பதிலும் சிறந்து விளங்குகின்றனர். சுவாமி, அம்மன், பெருமாள், விநாயகர், சங்கிலி பூதத்தார், ஐயப்பன் போன்ற சுவாமி சிற்பங்களை ஐம்பொன்னில் வடிக்கின்றனர்.
இங்குள்ள தொழிலாளர் குடும்பங்கள் 150 ஆண்டுகளாக பித்தளை குத்துவிளக்கு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.
பழைய பித்தளை பொருட்கள், விளக்குகளை விலைக்கு வாங்கியும், பெரிய வியாபாரிகளிடம் இருந்து பித்தளை பொருட்களை வாங்கியும் அதில் இருந்து பித்தளையை உருக்கி பித்தளை குத்துவிளக்கு தயாரிக்கின்றனர்.
வாழைப்பூ விளக்கு, காய் விளக்கு, கம்பி விளக்கு, லட்சுமி விளக்கு, தூண்டாமணி விளக்கு போன்ற விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன.
தேவையான விளக்கு தயாரிப்பதற்கு முன்கூட்டியே "மாதிரி' எடுத்து அதை மண்ணில் வைத்து பக்குவப்படுத்தி, பித்தளையை உருக்கி அதில் ஊற்றி குத்துவிளக்குகளைத் தயாரிக்கின்றனர்.
மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் காய் விளக்கு, கம்பி விளக்கு வகைகள் இங்கு அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. சுவாமிமலை, நாச்சியார்கோயிலில் பித்தளை விளக்குகள் தயாரித்தபோதிலும், வாகைகுளத்தில் தயாரிக்கப்படும் குத்துவிளக்குகள் நேர்த்தியாகவும், தத்ரூபமாகவும் இருப்பதால் புகழ்பெற்றுத் திகழ்கின்றன.
இங்கு குத்துவிளக்கு தயாரிக்கும் பட்டறைகள் அதிகமாக இருந்தபோதிலும், குறிப்பிட்ட சிலர் மட்டுமே பெரிய அளவில் உற்பத்தி செய்கின்றனர். பிறர் குறைந்த அளவில் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் மொரடாபாதில் இருந்து குத்துவிளக்குகள் தமிழகத்திற்கு பெருமளவில் விற்பனைக்கு வருவதால், வாகைக்குளம் பித்தளை குத்துவிளக்குகளுக்கு சற்று நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அச்சத்தில் தொழிலாளர்கள்: வாகைக்குளத்தில் பூம்புகார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் இயங்கிவரும் போதிலும் தங்களுக்கு எவ்வித சலுகைகளும் கிடைக்கவில்லை என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
குத்துவிளக்கு தயாரிப்புத் தொழிலுக்கு அரசு வரி விதிக்குமோ என்ற அச்சத்திலும் தொழிலாளர்கள் உள்ளனர். இதனால், இத் தொழிலை சிறிய அளவிலேயே செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அரசு சார்ந்த அமைப்புகள் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து, பித்தளை குத்துவிளக்கு தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதன் மூலம் அவர்களுக்கு நிரந்தரமாக வேலைவாய்ப்பு அளிக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...