வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வரம்பின்றி மணல் எடுப்பதால் சுவை மாறும் தாமிரபரணி நீர்

அம்பாசமுத்திரம், ஏப். 20:   தாமிரபரணி நதியில் இருந்து பெருமளவில் மணல் எடுத்ததால், ஆற்று நீரின் சுவை மாறி வருகிறது. மேலும், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நிலத்தடி நீர் வளமும் குன்றி வருகிறது

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:33 am

ஷேக் அப்துல்காதர்

அம்பாசமுத்திரம், ஏப். 20:   தாமிரபரணி நதியில் இருந்து பெருமளவில் மணல் எடுத்ததால், ஆற்று நீரின் சுவை மாறி வருகிறது. மேலும், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நிலத்தடி நீர் வளமும் குன்றி வருகிறது.

  மேற்குத் தொடர்ச்சி மலையில், பொதிகை மலையில் பூங்குளம் என்ற இடத்தில் உற்பத்தியாகும் தாமிரபரணி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 120 கி.மீ தொலைவு ஓடி, மன்னார்வளைகுடாவில் கடலில் கலக்கிறது. தென்மேற்கு பருவக் காற்று, வடகிழக்கு பருவக்காற்று காலங்களில் நீர்வரத்துப் பெற்றுள்ளதால் தாமிரபரணி வற்றாத ஜீவநதியாக திகழ்கிறது.

  இந் நதியில், கருணை ஆறு, ராமநதி, கோரையாறு, பச்சையாறு, எலுமிச்சையாறு உள்ளிட்ட பல ஆறுகள் கலக்கின்றன. மேலும், மலைப்பகுதியிலும், சமவெளிப் பகுதியிலும் சிற்றாறுகள் கலக்கின்றன.

  திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவைக்கும், பாசனத் தேவைக்கும் தாமிரபரணிதான் தண்ணீர் வழங்குகிறது.

  திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை நீர்  ஆதாரத்தைக் கொண்டு பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனாநதி, ராமநதி, குண்டாறு, கருப்பாநதி உள்ளிட்ட 12 அணைகள் கட்டப்பட்டுள்ளன. இவ்வணைகள் தாமிரபரணி நதியை மையமாகக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இவ்விரு மாவட்டங்களிலும் 2.55 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.

  2003- ல் முதல்முறையாக தாமிரபரணி நதியில் மணல் குவாரி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதன் பின் கடந்த 7 ஆண்டுகளில் தாமிரபரணி ஆற்றில் இருந்து பெருமளவில் மணல் எடுக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணி நதியில் முக்கூடல், சுத்தமல்லி உள்ளிட்ட இடங்களில் அரசு மணல் குவாரி செயல்பட்டது. தற்போது மணல் குவாரி செயல்படவில்லை என்றாலும், அனுமதியின்றி மணல் எடுப்பது தொடர்கிறது.

  ஆற்று நீரை சுத்தமாக்கி, பாதுகாக்கப்பட்ட நீராக வழங்குவதில் மணல் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டுள்ளதால் ஆற்றின் போக்கிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நீரின் சுவையும் மாறி வருகிறது.

  தாமிரபரணியில் குடிநீர்த் திட்டங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள உறைக்கிணறுகளைச் சுற்றிலும் இருந்து மணல் எடுத்த காரணத்தால் குடிநீர்த் திட்டங்களுக்கு கொண்டு செல்லும் நீர் சுத்தமாக இல்லை என்று புகார் கூறப்படுகிறது.

  10 ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அமைக்கப்படும் ஆழ்துளை அடிபம்புகளுக்கு குறைந்தது 30, 40 அடியில் தண்ணீர் கிடைத்து வந்தது. தற்போது 200 அடி வரை அமைத்தாலும் நீர் கிடைப்பதில்லை.

  ஆற்றில் குடிநீர் திட்ட உறைகிணறுகள் அமைந்துள்ள பகுதியில் இருந்து அதிகளவில் மாட்டு வண்டிகளில் மணல் எடுப்பதால் பல கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள குடிநீர்த் திட்டங்கள் பாதிப்படைந்து வருகின்றன.  

  நிலத்தடி நீர் குறைந்து வருவதால் பாசனமும் பாதிக்கப்பட்டு வருகிறது. இயற்கை வளங்களைப் பாதுகாக்கத் தவறியதால் நிலத்தடி நீரைப் பெருக்க புதிய திட்டங்களை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இயற்கை நமக்கு எண்ணற்ற வளங்களைத் தந்துள்ளது.

அவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாயம். தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.