வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அடிப்படை வசதிகளற்ற சுற்றுலாத் தலங்கள்

அம்பாசமுத்திரம், பிப். 27: திருநெல்வேலி மாவட்டத்தில் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களாக திகழும் பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இங்கு அடிப்படை வசதிகளை மேம்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:33 am

ஷேக் அப்துல்காதர்

அம்பாசமுத்திரம், பிப். 27: திருநெல்வேலி மாவட்டத்தில் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களாக திகழும் பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த

வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

  மேற்குத் தொடர்ச்சி மலை நீர் ஆதாரத்தைக் கொண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகள் கட்டப்பட்டுள்ளன. பிரதான இந்த அணைகளுடன் அருவிகளும் இயற்கை எழிலுடன் அமையப் பெற்றுள்ளன. இத் தலங்கள் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்துள்ளன.

  இங்குள்ள மணிமுத்தாறு, பாபநாசம் அகஸ்தியர் அருவி, காரையார் பாணத் தீர்த்த அருவிகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதால் அவை சுற்றுலாப் பயணிகளைக்

கவரும் சிறந்த தலங்களாக திகழ்கின்றன.

   கோடையில் மட்டுமல்லாமல் விடுமுறை நாள்களிலும் இந்த அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனர். தமிழகத்தில் அணைகளுடன் அருவிகள் அமைந்திருப்பது திருநெல்வேலி மாவட்டத்தில்தான் அதிகம்.

   பாபநாசம் அகஸ்தியர் அருவி, பாணத் தீர்த்த அருவி ஆகியன விக்கிரமசிங்கபுரம் நகராட்சி பகுதியில் உள்ளன. மணிமுத்தாறு அருவி மணிமுத்தாறு சிறப்புநிலை பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளது. மணிமுத்தாறு அணையை ஒட்டியுள்ள பூங்கா பொதுப்பணித் துறை நிர்வாகத்தில் உள்ளது. இந்த அருவிகள், அணைகள் இந்தியாவின் 17 வது புலிகள் காப்பகமான களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக எல்லையில் அமைந்துள்ளன.

   எனவே, இந்த சுற்றுலாத் தலங்களை சுற்றுலாப் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மேம்படுத்த சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுத்தபோதிலும், இவை புலிகள் காப்பக எல்லையில் அமைந்திருப்பதால் மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்ற வனத் துறையின் முட்டுக்கட்டையினால் அடிப்படை வசதிகள் சரிவர நிறைவேற்றப்படுவதில்லை.

   மணிமுத்தாறு அருவியில் சேதமடைந்த இரும்பு தடுப்பு வளையம் சீரமைக்கப்படவில்லை. அருவியை ஒட்டி 80 அடி ஆழம் கொண்ட தடாகம் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அச்சத்துடன் குளிக்கும் நிலை உள்ளது. அண்மையில் இந்த அருவியில் குளித்த இளைஞர் ஒருவர் 80 அடி தடாகத்தில் மூழ்கி இறக்க நேரிட்டது.

  பாபநாசம் அருவி பகுதியில் வலது புறம் முள்வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அருவியில் வீசப்படும் ஷாம்பு பாக்கெட் போன்ற பிளாஸ்டிக் பொருள்கள், கழிவுகளால்  சுகாதாரச் சீர்கேடாக காட்சியளிக்கிறது. இங்குள்ள பெண்கள் உடைமாற்றும் அறைகள் பராமரிப்பின்றி பூட்டிக் கிடக்கின்றன. இதனால், பெண்கள் திறந்த வெளியில் உடை மாற்றும் அவலம் உள்ளது. கழிவறை வசதியில்லாமல் அருவி பகுதி திறந்தவெளி கழிப்பிடமாக மாறி வருகிறது.

  பாபநாசம் அணையில் 20 நிமிஷம் படகு சவாரி செய்து அக்கரைக்குச் சென்று பாண தீர்த்த அருவியில் குளிப்பது சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது. மின்வாரிய பராமரிப்பில் உள்ள பாபநாசம் அணையில் படகு சவாரி செய்ய தனியாருக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. படகை சுற்றுலாத் துறை மூலம் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்துகின்றனர்.



வனத்துறை என்ன சொல்லுகிறது?

மணிமுத்தாறு, பாபநாசம் அருவி, பாண தீர்த்த அருவிகளின் சிறப்புகள் தமிழக அரசின் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இவை மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்கள் என பெருமைப்பட்டு கொள்ளும் அரசு, அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் அக்கறை காட்ட வேண்டும் என்பதே சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கை.

  புலிகள் காப்பக எல்லையில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த மத்திய அரசுக்கு தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உலக வங்கி நிதியுதவியுடன் அருவிகள் மேம்படுத்தப்படும் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.