அழிந்து வரும் கைத்தறி நெசவுத் தொழில்
அம்பாசமுத்திரம், மார்ச் 15: பாரம்பரிய கைத்தறி நெசவுத் தொழிலில் போதிய வருமானம் கிடைக்காத காரணத்தால், தொழிலாளர்கள் மாற்றுத் தொழில் தேடி செல்லத் தொடங் கியுள்ளனர். இதனால், இத் தொழில் படிப்படியாக அழிவை நோக


அம்பாசமுத்திரம், மார்ச் 15: பாரம்பரிய கைத்தறி நெசவுத் தொழிலில் போதிய வருமானம் கிடைக்காத காரணத்தால், தொழிலாளர்கள் மாற்றுத் தொழில் தேடி செல்லத் தொடங் கியுள்ளனர். இதனால், இத் தொழில் படிப்படியாக அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் கைத்தறி நெசவுத் தொழில் ஒரு காலத்தில் செழித்து விளங்கியது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பவானி, கரூர், அருப்புக்கோட்டை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், கோவை, ஈரோடு, சேலம், மதுரை என பல்வேறு பகுதியிலும் கைத்தறி நெசவுத் தொழிலில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி ரகங்களுக்கு பிற மாநிலங்களில் நல்ல வரவேற்பு உண்டு. காஞ்சிபுரத்தில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி பட்டுச் சேலை ரகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. சென்னையில் தயாராகும் சட்டை, லுங்கி ரகங்கள் பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. கரூர், பவானி, அருப்புக்கோட்டை பகுதியில் உயர்ரக பெட்ஷீட் ரகங்களை உற்பத்தி செய்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் வேட்டி ரகங்கள் பிரசித்தி பெற்றவை. திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த ஈரிழை வெள்ளை ரக துண்டுகளை பொதுமக்கள் விரும்பி அணிவர். இதுதவிர, கலர் சீசன் துண்டுகளும் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டன. இம் மாவட்டத்தில் பாளையங்கோட்டை, வீரவநல்லூர், புதுக்குடி பகுதிகளில் செயற்கை பட்டு ரக சேலைகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டன.
ஆனால், தற்போது கைத்தறி தொழில் படிப்படியாக அழியும் நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. நெசவாளர்கள் கைத்தறி தொழிலில் கோலோச்சிய காலம் போய், இப்போது குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களே இத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தைப் பொருத்தவரை பாளையங்கோட்டை, திருநெல்வேலி நகரம், பேட்டை, பத்தமடை, சேரன்மகாதேவி, வீரவநல்லூர், புதுக்குடி, வெள்ளங்குளி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், இடைகால், பொட்டல்புதூர், தென்காசி, புளியங்குடி, ராயகிரி, சங்கரன்கோவில் பகுதிகளில் பெருமளவில் கைத்தறி நெசவுத் தொழில் நடைபெற்று வந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டையபுரம், சாயர்புரம், புதியமுத்தூர், ஏரல் போன்ற பகுதியில் இத் தொழில் சிறப்பாக இருந்தது.
கைத்தறி துணிகளை அணிவதில் மக்கள் மத்தியில் ஆர்வம் குறைந்ததால், கைத்தறி துணிகள் தேக்கமடைந்து இத் தொழிலில் சரிவு ஏற்பட்டது. மத்திய, மாநில அரசுகள் கைத்தறி நெசவாளர்களுக்கு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், தறிக்கூடம் அமைத்துக் கொடுத்தல், நெசவாளர்கள் வசிக்கும் பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்தல், சேமிப்பு பாதுகாப்புத் திட்டம், "கிளஸ்டர்' எனும் கைத்தறி வளர்ச்சிக் குழுமம் என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இருப்பினும், பயனில்லை. இத் தொழிலில் போதிய வருமானம் கிடைக்காத காரணத்தால் தொழிலாளர்கள் மாற்றுத் தொழில் தேடி செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால் நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் நலியத் தொடங்கி பெரும்பாலான சங்கங்கள் மூடப்பட்டுவிட்டன. 105 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வந்த நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தற்போது 53 சங்கங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
நெசவாளர்களுக்கு அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய போதிலும், நெசவுத் தொழிலில் போதிய வருமானம் கிடைக்காத காரணத்தால் அவர்கள் இதனை பகுதி நேரத் தொழிலாகச் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கைத்தறி நெசவாளர்கள் வெளிச்சந்தையில் விற்பனையாகும் புதிய ரகங்களை உற்பத்தி செய்ய முன்வராததும் இத் தொழில் நலிவடைந்ததற்கு முக்கிய காரணம்.
ஆயத்த ஆடை பயிற்சி பயன் தருமா?
அண்மையில் கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்ற நெசவாளர் குறை தீர்க்கும் கூட்டத்தில் பேசிய நெசவுத் தொழிலாளர்கள் பலரும் அழிந்து வரும் கைத்தறி நெசவுத் தொழிலை காப்பாற்ற வேண்டும்; கைத்தறி நெசவாளர்களின் கடன்கள், நிதி நெருக்கடியில் சிக்கி நலிந்து வரும் நெசவாளர் சங்கங்களின் கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினர்.
இக் கூட்டத்தில் பேசிய ஆட்சியர் ஜெயராமன், கைத்தறி நெசவாளர்களுக்கு ஆயத்த ஆடை தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்தார்.
கைத்தறி தொழிலைக் காப்பாற்றும் முயற்சி ஒருபக்கம் இருந்தாலும், கைத்தறி தொழிலாளர்களுக்கு இதுபோன்ற காலத்திற்கு ஏற்ற பயிற்சி அளித்து அவர்களது வாழ்வில் ஒளியேற்றுவது அவசியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...