வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

புதிய வெள்ளநீர்க் கால்வாய் அமைக்க திட்டம்

அம்பாசமுத்திரம், செப். 23:  மழைக் காலங்களில் தாமிரபரணி ஆற்றில் வீணாகக் கடலில் கலக்கும் 13 டிஎம்சி நீரை வறட்சிப் பகுதிகளுக்கு வழங்கும் வகையில் தாமிரபரணி, கடனாநதிகளை இணைத்து உப்போடை, கல்லாறு வரை புதிய வ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 6:02 pm

ஷேக் அப்துல்காதர்

அம்பாசமுத்திரம், செப். 23:  மழைக் காலங்களில் தாமிரபரணி ஆற்றில் வீணாகக் கடலில் கலக்கும் 13 டிஎம்சி நீரை வறட்சிப் பகுதிகளுக்கு வழங்கும் வகையில் தாமிரபரணி, கடனாநதிகளை இணைத்து உப்போடை, கல்லாறு வரை புதிய வெள்ளநீர்க் கால்வாய் அமைக்கும் திட்டம் அரசின் ஆய்வில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 2.55 லட்சம் ஏக்கர் நிலங்கள் தாமிரபரணி நதியால் பாசனம் பெறுகின்றன. இந் நதியில் வடகிழக்கு, தென்மேற்குப் பருவக்காற்று காலங்களிலும் அதிக நீர்வரத்து உள்ளதால் தாமிரபரணி வற்றாத ஜீவநதியாக திகழ்கிறது.

  மழைக் காலங்களில் சராசரியாக தாமிரபரணி ஆற்றில் 13,800 மில்லியன் கனஅடி நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. இந்த, நீரை இவ்விரு மாவட்டங்களில் உள்ள வறட்சிப் பகுதிகளுக்கு வழங்கும் வகையில் | 369 கோடியில் நதிநீர் இணைப்புத் திட்ட வெள்ளநீர்க் கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  இருப்பினும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கு கிழக்கே வீணாகும் 13 டிஎம்சி நீரை சேமிக்கும் வகையில் கோரையாறு, இலுப்பையாறு, ஜம்புநதி ஆறுகளின் குறுக்கே புதிய அணைகள் கட்ட வேண்டும்.

  மேலும் கடனாநதி, ராமநதி ஆகியவற்றை இணைத்து வெள்ளநீர்க் கால்வாய் அமைத்து தென்காசி, சங்கரன்கோவில், சிவகிரி பகுதிக்குத் தண்ணீர் வழங்க வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட விவசாய சங்கச் செயலர் ஆர். கசமுத்து, சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவிடம் கோரிக்கை மனு அளித்தார்.

  இம் மனுவுக்கு பொதுப்பணித் துறை மூலம் அளிக்கப்பட்ட பதில் வருமாறு:

  திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு முதல் ஜம்புநதி வரையுள்ள ஆறுகள் தாமிரபரணி நதியில் கலக்கும் வகையிலும், ஜம்புநதிக்கு பிறகு உற்பத்தியாகும் ஆறுகள் சிற்றாற்றில் கலக்கும் வகையில் இயற்கையாகவே நில அமைப்பு அமைந்துள்ளது.

  பாபநாசம், சேர்வலாறு அணைகள் சுரங்கம் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. பாபநாசத்தில் கோரையாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டம் ஆய்வில் உள்ளது. இப்பகுதி களக்காடு, முண்டன்துறை புலிகள் காப்பக எல்லையில் இருப்பதால் அனுமதி கிடைப்பதில் சிரமம் உள்ளது. இலுப்பையாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டமும் ஆய்வில் உள்ளது.

  மேலும், ஜம்புநதியின் குறுக்கே போதிய நீர்வரத்து இல்லாத காரணத்தால் அங்கு நீர்த்தேக்கம் கட்டும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இம் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நில மட்டங்கள் வெவ்வேறு ஏற்றத் தாழ்வுகளுடன் அமைந்திருப்பதால் இந்த அணைகளை நிலக்கால்வாய் மூலம் இணைக்க இயலாது.

  இதற்கு மாற்றுத் திட்டமாக தாமிரபரணி ஆற்றில் கோடை மேலழகியான் அணைக்கட்டில் இருந்து செல்லும் வடக்கு கோடை மேலழகியான் கால்வாயை விரிவுபடுத்தி, கடனாநதியுடன் இணைத்து அதன் பின்னர், கடனாநதியின் கடைசி அணைக்கட்டான காங்கேயம் அணைக்கட்டில் இருந்து செல்லும் காங்கேயன் கால்வாயை விரிவுபடுத்தி அதிலிருந்து புதிய வெள்ளநீர்க் கால்வாய் அமைக்க பரிசீலிக்கப்பட்டுள்ளது.

  இதன்படி சித்தாறு மற்றும் வறண்ட பகுதியில் அமைந்துள்ள உப்போடை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்லாறு வரை இணைக்கும் புதிய கால்வாய் குறித்த பூர்வாங்க ஆய்வுப் பணி முடிவுற்று திட்டம் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.