ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

மேலமணக்குடி பாலப்பணி: 2012 மார்ச்சில் முடிக்கத் திட்டம்

கன்னியாகுமரி, நவ. 16: கன்னியாகுமரி அருகே அமைக்கப்பட்டு வரும் கீழமணக்குடி-மேலமணக்குடி இணைப்பு பாலப் பணிகள் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.  கன்னியாகுமரியில் இருந்து 8 கி.ம

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:27 pm

தி. ராமகிருஷ்ணன்

கன்னியாகுமரி, நவ. 16: கன்னியாகுமரி அருகே அமைக்கப்பட்டு வரும் கீழமணக்குடி-மேலமணக்குடி இணைப்பு பாலப் பணிகள் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

 கன்னியாகுமரியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கீழமணக்குடி கடற்கரை கிராமம். இங்கிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் மேலமணக்குடி கிராமம் உள்ளது.

 மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து வரும் தண்ணீர் பழையாறு வழியாக மணக்குடி காயலில் கலக்கிறது. இந்தத் தண்ணீர் கலக்கும் காயல் பகுதியில் இயற்கையாக மணல் திட்டுகள் உருவாகியுள்ளன.

 இதைப் பயன்படுத்தி தண்ணீர் குறைவான காலங்களில் கீழமணக்குடியில் மற்றும் மேலமணக்குடி மக்கள் இருபுறமும் நடந்து சென்று வந்தனர். தண்ணீர் அதிகமாக இருக்கும் காலங்களில் இரு ஊர்களுக்கும் இடைப்பட்ட தொலைவை பொதுமக்கள் வள்ளங்களைப் பயன்படுத்தி கடந்து வந்தனர். ஆனால், மேலமணக்குடிக்கு வாகனங்களில் செல்வோர் 22 கி.மீ. வரை சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

 இதனால், மாணவ-மாணவிகள் மட்டுமன்றி பல்வேறு தரப்பினரும் பாதிப்புக்கு உள்ளாகினர். எனவே,இரு ஊர்களையும் இணைக்கும் பாலம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் 40 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இப்பகுதியில் ரூ.15 கோடி செலவில் அமைக்கப்பட்ட இணைப்பு பாலம், 2004-ல் ஏற்பட்ட சுனாமியால் பல துண்டுகளாகச் சிதறியது.

 இதன்பின்பு ராணுவத்தின் உதவியுடன் தாற்காலிக இரும்புப் பாலம் அமைக்கப்பட்டது. இதன் வழியே இருசக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட சிறிய வாகனங்களே செல்ல முடியும். எனவே, இங்கு புதிய பாலம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

 இதையடுத்து தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.22 கோடி செலவில் நிரந்தர பாலம் அமைக்கும் பணிக்கு 16.3.2010 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. தாற்காலிகப் பாலம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 150 மீட்டர் வடக்கு பகுதியில் புதிய பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. பாலத்தின் மொத்த நீளம் 370 மீட்டர்.

 ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் இப் பணியில் ஈடுபட்டுள்ளது.

 இப் பாலத்துக்காக சுமார் 1700 டன் இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாலத்தின் நடுப்பகுதியில் 50 மீட்டர் அகலத்தில் 3 ஆர்ச்சுகள், பாலம் முழுவதற்கும் 22 மீட்டர் இடைவெளியில் 12 மீட்டர் உயரத்துக்கு ராட்சத பில்லர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

 இம் மாவட்டத்தில் இவ்வகை பாலம் அமைப்பது இதுவே முதல்முறை.

 இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை உயர்அதிகாரிகள் கூறுகையில், பாலம் அமைக்கும் பணி 75 சதவிகிதம் முடிந்துள்ளது. 2012-ம் ஆண்டு மார்ச்க்குள் முழு பணிகளும் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.