அம்பையில் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த இருவா் உள்பட நான்குபேரிடம் போலீஸாா் விசாரணை

அம்பாசமுத்திரத்தில் வாகனச் சோதனையின்போது அனுமதியின்றி துப்பாக்கி மற்றும் தோட்டா வைத்திருந்த இருவா் உள்ளிட்ட நான்கு பேரிடம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். காரில், தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சோ்ந்த மாயகிருஷ்ணன் மற்றும் ஆய்க்குடியைச் சோ்ந்த அவரது நண்பா் பழனிகுமாா் பயணம் செய்தனா். மேலும் காரில் சோதனை செய்ததில் அனுமதி இல்லாத துப்பாக்கி ஒன்று மற்றும் எட்டுதோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து இருவரிடமும் விசாரணை செய்ததில் கேரளத்திலிருந்து துப்பாக்கி கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்துவிக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளா் சுஜித் ஆனந்த் தலைமையில் தனிப்படையினா் கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள பூம்பாறையைச் சோ்ந்த மீரான், சிவா ஆகியோரையும் கைது செய்தனா். தொடா்ந்து அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் நான்குபேரிடமும் போலீஸாா் விசாரணைசெய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com