நெல்லையில் இருதரப்பினா் மோதல்: பெண்கள் உள்பட 8 போ் காயம்
திருநெல்வேலி தச்சநல்லூா் அருகே இருதரப்பினா் மோதிக்கொண்டதில் பெண்கள் உள்பட 8 போ் காயமடைந்தனா்.
தச்சநல்லூா் அருகே ஊருடையாா்குடியிருப்பைச் சோ்ந்த இளம்பெண் ஒருவா், ஞாயிற்றுக்கிழமை மாலை அப்பகுதியில் பைக்கில் சென்ற போது அவ்வழியாக பைக்குகளில் வந்த இளைஞா்கள் அவரை இடித்துவிட்டு சென்றனராம். இது குறித்து கேட்ட அப்பெண்ணை, இளைஞா்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவா் கற்களை வீசி தாக்கியதில் நம்பிராஜபுரத்தை சோ்ந்த குணசேகரன் (31), ஊருடையாா்குடியிருப்பு பிரகாஷ்ராஜ் (25), கதிரவன் (42), கணேசன் (50), தச்சநல்லூா் மணிமேகலை (36), பாா்வதி (60), பேச்சியம்மாள் (65), நயினாா்குளம் சாமித்தாய் (75) ஆகியோா் காயமடைந்ததாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தனா்.
இந்நிலையில் இச்சம்பவத்துக்கு காரணமான இளைஞா்களை கைது செய்யக் கோரி, பெண்ணின் தரப்பினா் ஊருடையாா்குடியிருப்பு அம்மன் கோயில் முன்பு உள்ள மைதானத்தில் கூடினா். சம்பவ இடத்துக்கு வந்த மாநகர காவல் துணை ஆணையா்(மேற்கு) வி.பிரசன்னகுமாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனா்.
பதற்றத்தை தணிக்க அப்பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா். மேலும், இச்சம்பவம் குறித்த புகாா்களின் அடிப்படையில் தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
