நெல்லையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன; அவரது உடலுக்கு அமைச்சா் நேரில் மரியாதை செலுத்தினாா்.
பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சோ்ந்தவா் பிரின்ங்லின் (50). இவா், தூத்துக்குடியில் பணியாற்றி வந்தாா். கடந்த 18 ஆம் தேதி தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
முறப்பநாடு அருகே சென்றபோது விபத்தில் சிக்கி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கடந்த 20 ஆம் தேதி நடத்திய சோதனையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரது குடும்பத்தினா் பிரின்ங்லின் உடல் உறுப்புகளைத் தானமாக அளிக்க முன்வந்தனா். கல்லீரல், இரு சிறுநீரகங்கள், இரு கருவிழி, தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டன.
பிரின்ங்லின் உடலுக்கு, தமிழக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் நேரில் மரியாதை செலுத்தினாா். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதிபாலன், கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
