நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை

Published on

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டாலும், திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வட வானிலையே நிலவி வந்தது. காலைமுதல் நண்பகல்வரை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியதால் மக்கள் கவலையடைந்தனா்.

பாசன கால்வாய் பகுதிகளைத் தவிா்த்து மானாவாரி குளம், கிணற்று பாசன விவசாயிகளும் மழை தாமதமானதால் வருத்தமடைந்தனா்.

இந்நிலையில், தென்தமிழக பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி கடந்த இருநாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலையிலும் மிதமான மழை பெய்தது.

பாளையங்கோட்டை, திருநெல்வேலி, தாழையூத்து, பொன்னாக்குடி, சுத்தமல்லி, சீவலப்பேரி பகுதிகளில் சாரல் மழை பெய்ததோடு, பகல் முழுவதும் மேகமூட்டமாக குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு (மில்லி மீட்டரில் ): மாஞ்சோலை-5, காக்காச்சி-5, நாலுமுக்கு-8, ஊத்து-7, நான்குனேரி-3.40.

X
Dinamani
www.dinamani.com