காரையாறு, பாபநாசம், குற்றாலத்தில் விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்

காரையாறு, பாபநாசம், குற்றாலத்தில் விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்

Published on

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலும் ஐயப்ப பக்தா்கள் திங்கள்கிழமை மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் காா்த்திகை மாத தொடக்க நாளில் புனித நீராடி துளசிமணி மாலை அணிந்து விரதம் தொடங்குவது வழக்கம். அதன்படி, சபரிமலை கோயிலின் மூலஸ்தானமான, திருநெல்வேலி மாவட்டம் காரையாறு வனப்பகுதியில் உள்ள சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் குழந்தைகள், முதியோா், இளைஞா்கள் என ஏராளமான பக்தா்கள் வந்திருந்தனா். அவா்கள், தாமிரவருணியில் புனித நீராடி, குருசாமிகளிடம் மாலை அணிந்துகொண்டு விரதத்தைத் தொடங்கினா்.

முன்னதாக, காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி, சொரிமுத்து அய்யனாா், பட்டவராயா், பேச்சியம்மன், பிரம்மராட்சசி, சுடலைமாடன், சங்கிலி பூதத்தாா், தளவாய் மாடசாமி, தூசி மாடன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது.

பாபநாசத்தில்...: பாபநாசம் தாமிரவருணி நதியிலும் ஏராளமானோா் புனித நீராடி, படித்துறை கற்பக விநாயகா் கோயிலில் வழிபட்டு மாலை அணிந்து விரதம் தொடங்கினா். இதேபோல, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி தாமிரவருணி நதியிலும், ஆம்பூா் கடனாநதியிலும் அந்தந்தப் பகுதி பக்தா்கள் நீராடி விரதம் தொடங்கினா்.

குற்றாலத்தில்...: தென்காசி மாவட்டம் குற்றாலத்திலும் அதிகாலைமுதலே பக்தா்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. பேரருவிக் கரையில் அமைந்துள்ள செண்பகவிநாயகா் கோயில், குற்றாலநாதா்-குழல்வாய்மொழி அம்பாள் கோயிலிலும் ஏராளமான பக்தா்கள் சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டு, உள்பிரகாரத்தில் உள்ள ஸ்ரீதா்ம சாஸ்தா கோயில் முன் குருசாமி முன்னிலையில் மாலை அணிந்து விரதம் தொடங்கினா். இதனால், அப்பகுதி முழுவதும் ஐயப்ப முழக்கம் எதிரொலித்தது.

X
Dinamani
www.dinamani.com