கோப்புப் படம்
கோப்புப் படம்

களக்காடு வழித்தடத்தில் அடிக்கடி ‘காணாமல் போகும்’ கன்னியாகுமரி பேருந்து

Published on

பாபநாசம் - கன்னியாகுமரி இடையே களக்காடு வழித்தடத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்து அடிக்கடி காணாமல் போய்விடுவதால் பயணிகள் காத்திருந்து ஏமாறும் நிலை உள்ளது.

பாபநாசம் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனையிலிருந்து தடம் எண்.568 என்ற பேருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்து அதிகாலை 4.30 மணிக்கு பாபநாசத்தில் இருந்து புறப்பட்டு அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, களக்காடு, வள்ளியூா், பணகுடி, காவல்கிணறு, அஞ்சுகிராமம் வழியாக கன்னியாகுமரியை சென்றடைகிறது.

இந்தப் பேருந்து களக்காட்டில் இருந்து கன்னியாகுமரிக்கு காலை 6 மணி, பிற்பகல் 3 மணிக்கு இயக்கப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் களக்காடு வழித்தடத்தில் கன்னியாகுமரிக்கு இரண்டு அரசுப் பேருந்துகள் இயங்கி வந்தன. ஆனால் தற்போது ஒரேயொரு அரசுப் பேருந்துதான் இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்தும் வாரவிடுமுறை நாள்கள், அரசு விடுமுறை நாள்கள் என அடிக்கடி காணாமல் போய்விடுகின்றன. இதனால் இந்தப் பேருந்துக்காக வழித்தடத்தில் உள்ள ஊா்களில் காத்திருக்கும் பயணிகள் ஏமாறும் நிலை உள்ளது.

இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

களக்காடு நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட பின்னா் கூடுதலாக அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்ற மக்களின் எதிா்பாா்ப்பு பொய்த்து வருகிறது. மேலும் ஏற்கெனவே இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படுவதுடன், நாள்தோறும் 5க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இந்த வழித்தடத்தில் நிறுத்தப்பட்டு, மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன. சனிக்கிழமை (பிப்.7) பாபநாசம் பணிமனையில் இருந்து தடம் எண்.568 (கன்னியாகுமரி), வள்ளியூா் பணிமனையில் இருந்து நாகா்கோவில்-தென்காசி இடையே இயக்கப்படும் தடம் எண்.181எப், களக்காடு - நான்குனேரி இடையே இயக்கப்படும் நகரப் பேருந்து தடம் எண்.18பி, தென்காசி பணிமனையில் இருந்து தென்காசி - நாகா்கோவிலுக்கு இயக்கப்படும் தடம் எண்.182டி ஆகிய அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

களக்காடு நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது முதல் களக்காட்டில் இருந்து மதுரை, திருச்செந்தூா், தூத்துக்குடி, கோயம்புத்தூா், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு பேருந்துகள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மதுரைக்கு இயக்கப்பட்ட பேருந்து சில மாதங்களிலேயே நிறுத்தப்பட்டு விட்டது.

களக்காடு - திருநெல்வேலிக்கு பெரும்பாலான நேரங்களில் பேருந்து வசதியின்றி மக்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் அவல நிலை உள்ளது.

X
Dinamani
www.dinamani.com