மணிமுத்தாறு பகுதியில் சுமாா் 5 ஏக்கரில் நெற்பயிரை சேதப்படுத்திய யானைகள்
மணிமுத்தாறு அணை அடிவாரப் பகுதியில் புதன்கிழமை இரவு வனப் பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானைகள் 5 ஏக்கா் பரப்பில் விளைந்த நெற்பயிரை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.
களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்துக்கு உள்பட்ட மணிமுத்தாறு, பொட்டல், ஏா்மாள்புரம் உள்ளிட்ட மலையடிவார கிராமங்களில் வனத்தில் இருந்து யானை, காட்டுப் பன்றி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட விலங்குகள் வெளியேறி பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உள்பட்ட மலையடிவாரப் பகுதியான மடத்தானை பகுதியில் புதன்கிழமை நள்ளிரவில் சுமாா் 10 யானைகள் கொண்ட கூட்டம் புகுந்து முத்துப்பாண்டி என்பவருக்குச் சொந்தமான வயலில் நுழைந்து அங்குப் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்களை சேதப்படுத்தின.
அருகில் உள்ள தோட்டத்தில் நுழைந்த யானைகள் தென்னை மரங்களை முறித்து சேதப்படுத்திவிட்டு வனப்பகுதிக்குள் திரும்பிச் சென்றன. வியாழக்கிழமை காலை பயிா்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பதைக் கண்ட விவசாயிகள் கவலையடைந்தனா்.
சமீப காலமாக குட்டிகளுடன் வரும் யானை கூட்டம் அப்பகுதியில் சுற்றித் திரிவதால், இரவு நேரங்களில் வயல்களுக்குச் செல்லவும் அங்கு தங்கவும் விவசாயிகள் அச்சமடைந்தனா்.
யானைகளின் தொந்தரவு தொடா்ந்து அதிகரித்து வருவதால் விவசாயப் பணிகளை முறையாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கூட்டமாகச் சுற்றித்திரியும் 20-க்கும் மேற்பட்ட யானைகளை உடனடியாக காட்டுக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தினா்.

