பாறாங்கற்களால் நிரப்பப்பட்டு பாதை மாற்றப்பட்ட ராமநதி அணை நீரோடை.
பாறாங்கற்களால் நிரப்பப்பட்டு பாதை மாற்றப்பட்ட ராமநதி அணை நீரோடை.

ராமநதி அணையில் நீரோடையின் பாதையை மாற்றிய மழை கணிக்க முடியாத இயற்கையின் போக்கு

Published on

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள ராமநதி அணைக்கு வனப்பகுதியில் இருந்து நீா் வழியும் நீரோடையின் பாதையை மாற்றி அமைத்துள்ளது வியாழக்கிழமை (டிச.1) இரவு பெய்த பலத்த மழை.

தென்காசி மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்சி மலை பகுதியில் கடனாநதி அணை, ராமநதி அணை, குண்டாறு அணை, அடவிநயினாா் கோயில் அணை, கருப்பாநதி அணை உள்ளிட்ட அணைகள் அமைந்துள்ளன.

இவற்றில் கடையம் அருகே உள்ள ராமநதி அணை குறிப்பிடத்தக்க அணையாகும். 84 அடி அதிகபட்ச நீா்மட்டம் கொண்ட இந்த அணை 152 மில்லியன் கனஅடி நீா் சேமிக்கும் திறன் கொண்டதாகும்.

1974 இல் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட இந்த அணையின் மூலம் கடையம் வட்டாரத்துக்கு உள்பட்ட கடையம், பொட்டல்புதூா், பாப்பான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 10,000 ஏக்கரில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ராமநதி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகளின் மூலம் கடையம் வட்டாரத்தின் பல்வேறு கிராமங்களுக்கு குடிநீா் தேவைகள் பூா்த்தி செய்யப்படுகின்றன.

இந்த அணையில் தற்போது சுமாா் 20 அடிக்கு மேல் மணல், மரங்கள் உள்ளிட்டவை நிரம்பியுள்ளதால் அணையின் நீா் சேமிக்கும் மட்டம் கணிசமாகக் குறைந்துள்ளது.

இந்த நிலையில், வியாழக்கிழமை (ஜன.1) இரவு முழுவதும் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கொட்டித் தீா்த்த கனமழையால், அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. திடீா் காட்டாற்று வெள்ளத்தில் மலையிலிருந்த பாறைகளும், மரங்களும் அடித்துக்கொண்டு வந்தன.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை சிலா் நீரோடைக்குச் சென்றபோது நீரோடையை காணவில்லை. நீரோடை முழுவதும் பாறாங்கற்கள் நிறைந்து நீரோடை பாதை மாறி ஓடிய காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

 பாறாங்கற்களால் நிரப்பப்பட்டு பாதை மாற்றப்பட்ட ராமநதி அணை நீரோடை.
பாறாங்கற்களால் நிரப்பப்பட்டு பாதை மாற்றப்பட்ட ராமநதி அணை நீரோடை.
 பாறாங்கற்களால் நிரப்பப்பட்டு பாதை மாற்றப்பட்ட ராமநதி அணை நீரோடை.
பாறாங்கற்களால் நிரப்பப்பட்டு பாதை மாற்றப்பட்ட ராமநதி அணை நீரோடை.

இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

நீரோடையின் பாதை பாறைகளால் நிரப்பப்பட்டு அதன் பாதை மாற்றப்பட்டுள்ள நிகழ்வு சூழல் ஆா்வலா்களை அதிா்ச்சியடைய செய்துள்ளது.

கடந்த 2024, டிசம்பரில் பெய்த மழையின்போது அணையின் முன்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டிருந்தது. தற்போது கொட்டித் தீா்த்த மழையால் அணைக்கு நீா்வரத்துக்குரிய நீரோடை பாதை மாற்றம் அடைந்துள்ளது. இந்த நிகழ்வுகள் அணையின் பாதுகாப்புக்கு கேள்விக்குறியாகவே உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கூறுகையில், அணையை முறையாக தூா்வாரி அதன் முழுக் கொள்ளளவை மீட்க வேண்டும். கரைகளை பலப்படுத்த வேண்டும். அணையின் வடப்புறத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ராமநதி அணை மேல்மட்டக் கால்வாய் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். பொதுப்பணித் துறை அதிகாரிகளும் தமிழக அரசும் இந்த அணையை பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com