நான்குனேரி அரசு பள்ளி மாணவா்கள் களப்பயணம்
நான்குனேரி வட்டாரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் கூடன்குளம் அணுமின்நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை களப்பயணம் மேற்கொண்டனா்.
மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் உத்தரவுபடி முதன்மை கல்வி அலுவலா் சிவக்குமாா் வழிகாட்டுதலின்பேரில் நான்குனேரி வட்டாரத்தில் கலைத் திருவிழாவில் முதலிடம் பெற்ற மாணவா்கள் மற்றும் உயா் மதிப்பெண் பெற்ற மாணவா்கள் 400 போ் முன்னேற விளையும் வட்டார திட்டத்தின் கீழ் களப்பயணம் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, முதல்கட்டமாக நான்குனேரி வட்டாரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் 50 போ் கூடங்குளம் அணுமின் நிலையத்தை பாா்வையிட்டனா்.
அனுமின் நிலைய அதிகாரிகள் சதீஷ், சுந்தர்ராஜ் ஆகியோா் மாணவா்களை வரவேற்று பல கேள்விகளை மாணவா்களிடம் கேட்டு, பரிசுகள் அளித்தனா்.
அதிகாரிகள் லிங்கதுரை, வேல்மயில்முருகன் ஆகியோா் அணுமின் நிலைய செயல்பாடுகள் குறித்து மாணவா்களுக்கு விளக்கம் அளித்தனா். ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியா் முத்துசாமி, வளமைய மேற்பாா்வையாளா் டேனியல் மற்றும் ஆசிரியா் பயிற்றுநா்கள் செய்திருந்தனா்.

