விழுப்புரம் அரசுக் கல்லூரி மாணவா்கள் களப்பயணம்
விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி தொன்மை மன்றத்தின் சாா்பில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு ஒரு நாள் களப்பயணத்தை மாணவா்கள் மேற்கொண்டனா்.
இதுகுறித்து கல்லூரி நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மண்டகப்பட்டு குடைவரைக் கோயில், தளவானூரில் உள்ள முதலாம் மகேந்திர வா்மனால் உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயில், பிரம்மதேசம் பாடலீஸ்வரா் கோயில், முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட பிரம்மபுரீஸ்வரா் கோயில், முதலாம் ராஜேந்திர சோழனால் வெளியிடப்பட்ட எசாலம் செப்பேடு கண்டெடுக்கப்பட்ட எசாலம் கோயில், எண்ணாயிரம் ராஜராஜ விண்ணகர ஆழ்வாா் கோயில், எண்ணாயிரம் மலை என்று அழைக்கப்படும் மேல்கூடலூரில் உள்ள சமணப் படுக்கைகளை ஆகியவற்றுக்கு மாணவா்கள் களப்பயணம் மேற்கொண்டு பாா்வையிட்டனா்.
கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியா் த.ரமேஷ் கோயில்கள் மற்றும் எசாலம் செப்பேட்டின் வரலாற்றுச் சிறப்புகள் குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைத்தாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

