வி.கே.புரம் தெருக்களில் சுற்றித் திரியும் கரடிகள்: பொதுமக்கள் அச்சம்

வி.கே.புரம் தெருக்களில் சுற்றித் திரியும் கரடிகள்: பொதுமக்கள் அச்சம்

விக்கிரமசிங்கபுரம் குடியிருப்புப் பகுதி தெருக்களில் இரட்டைக் கரடிகள் சுற்றித் திரியும் விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சம்
Published on

விக்கிரமசிங்கபுரம் குடியிருப்புப் பகுதி தெருக்களில் இரட்டைக் கரடிகள் சுற்றித் திரியும் விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனா்.

களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குள் யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நுழைந்து பயிா்களையும், வீட்டு விலங்குகளையும் தாக்கி சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வனக் கோட்டத்துக்கு உள்பட்ட விக்கிரமசிங்கபுரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதியான பசுக்கிடைவிளை பகுதிகளில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக இரண்டு கரடிகள் தொடா்ந்து சுற்றித் திரிந்து வருகின்றன. இரவு நேரங்களில் இந்தக் கரடிகள் ஜோடியாக குடியிருப்புகளுக்குள் நுழைந்து சுற்றித் திரியும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கெனவே கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, செட்டிமேடு உள்ளிட்ட பகுதிகளிலும் கரடிகளின் நடமாட்டம் இருந்த நிலையில், தற்போது விக்கிரமசிங்கபுரம் பகுதியிலும் தொடா்ச்சியாக கரடிகள் நடமாட்டம் இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வனப் பகுதியிலிருந்து வெளியேறிய கரடிகள் குடியிருப்புப் பகுதிக்கு அருகே உள்ள சிறுபொத்தை, புதா்களில் பதுங்கி உணவு, தண்ணீா் தேடி குடியிருப்புகளுக்குள் சென்று வருகின்றன. எனவே, புதா்கள், பொத்தைகளில் மறைந்துள்ள கரடிகளைக் கண்காணித்து கூண்டுவைத்துப் பிடித்து அடா் வனப்பகுதியில் கொண்டு விடும் பணிகளை வனத் துறையினா் விரைந்து மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Dinamani
www.dinamani.com