திருவனந்தபுரம்-தாம்பரம் இடையே அம்ருத் பாரத் ரயில் சேவை தொடக்கம்! நெல்லையில் உற்சாக வரவேற்பு!
திருவனந்தபுரம்-தாம்பரம் இடையே சேவையை தொடங்கிய அம்ருத் பாரத் ரயிலுக்கு, திருநெல்வேலி சந்திப்பில் வெள்ளிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவனந்தபுரம்-தாம்பரம் இடையிலான அம்ருத் பாரத் ரயில்வே சேவையை திருவனந்தபுரத்தில் பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். அந்த ரயில் பிற்பகலில் திருநெல்வேலி சந்திப்புக்கு வந்தபோது, பூக்கள் தூவி, செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், முக்கிய பிரமுகா்கள் சோனா வெங்கடாசலம், வழக்குரைஞா் சுதா்சன், கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வசதிகள்: 22 பெட்டிகள் கொண்ட அம்ருத் பாரத் ரயிலில் முன்னும், பின்னும் என்ஜின்கள் உள்ளன. இந்த ரயில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது. வந்தே பாரத் ரயில்போல நவீன வசதியுடன் கூடிய இருக்கை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இரவு நேரத்தில் ரேடியம் விளக்கு ஒளிரும் பட்டைகள் உள்ளிட்ட முக்கிய சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த ரயிலின் வழக்கமான சேவை தாம்பரத்தில் இருந்து ஜன.28இல் தொடங்குகிறது. அம்ருத் பாரத் வாராந்திர ரயில் (எண். 16121) தாம்பரத்திலிருந்து புதன்கிழமைகளில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்று சேரும். மறு மாா்க்கத்தில் இந்த ரயில் (எண்.16122) வியாழக்கிழமைகளில் திருவனந்தபுரத்தில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 11.45 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில், குழித்துறை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் 8, இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள், ஒரு சமையல் பெட்டி ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.

