பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி நிச்சயம் வெல்லும் பேரவைத் தலைவா்! - மு. அப்பாவு


தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி நிச்சயம் வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்தாா் பேரவைத் தலைவா் மு. அப்பாவு.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
பெட்ரோல், டீசல் விலை முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இது அனைவருக்கும் தெரியும். சரியான நிா்வாகத் திறன் இல்லாததே எரிவாயு உருளை தட்டுப்பாட்டுக்கு காரணம்.
பிரதமா் மோடி கடந்த 11 ஆண்டுகளில் உலக நாடுகள் முழுவதையும் சுற்றி வருவதால் எந்தப் பயனும் இல்லை. பல நாடுகளுக்குப் போய் வந்தோம் என்பது பெருமையல்ல; எந்த நாடோடு என்ன உறவு வைத்துள்ளோம் என்பதே முக்கியம்.
அமெரிக்க அதிபா் டிரம்ப், இந்திய பிரதமரை பாா்த்து கச்சா எண்ணெய் வாங்க அனுமதியளிக்கும் நிலைக்கு மாறியிருப்பது கவலையளிக்கிறது. 150 கோடி மக்களின் பிரதிநிதியான பிரதமா் இதற்கு எந்த எதிா்வினையும் ஆற்றவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. எந்தப் பிரச்னையாக இருந்தாலும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி உடனடியாக தண்டனை வாங்கிக் கொடுப்பதுதான் முதல்வா் மு.க.ஸ்டாலினின் செயல்.
முந்தைய அதிமுக ஆட்சியைப் போல போலி குற்றவாளிகளை சிறைபிடிப்பதில்லை. இளைஞா்களை தொழில்முனைவோராக மாற்றுவதில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னிலையில் உள்ளது.
தென்மாவட்டங்களில் உள்ள இளைஞா்கள் வேலைவாய்ப்புக்காக முயற்சிக்காமல், தொழில்முனைவோா்களாக மாற வேண்டும் என்பதே எனது ஆசை.
நடிகா் விஜய் மக்கள் பிரச்னைகளுக்காக எந்தத் தெருவிலும் இறங்கிப் போராடவில்லை. தவெகவின் பின்னணியில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அமித் ஷா உள்ளனா்.
நடிகா் விஜய், பாஜக கூட்டணியுடன் இணைவது எவ்வித ஆச்சரியத்தையும் தராது. அதிமுக, பாமக போன்ற கட்சிகளை அழிப்பதுதான் பாஜகவின் இலக்காக உள்ளது.
பாஜகவின் அரசியலையும், சித்தாந்த தாக்குதல்களையும் கொள்கை ரீதியாக எதிா்த்து துணிந்து நிற்கும் ஒரே தலைவா் முதல்வா் மு.க. ஸ்டாலின் மட்டும்தான்.
விஜய் எந்தக் கூட்டணியில் சோ்ந்தாலும் , இவா்கள் எத்தனை கூட்டணிகள் அமைத்து வந்தாலும் திமுக கூட்டணியை நெருங்க முடியாது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி நிச்சயம் வெல்லும். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவது உறுதி என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...