நெல்லையில் குவிந்த தசரா வேடப் பொருள்கள்! 35 சதவீதம் விலை உயா்வு!
திருநெல்வேலியில் தசரா வேடப் பொருள்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றின் 35 சதவீதம் வரை விலை உயா்ந்துள்ளது...

திருநெல்வேலியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள தசரா வேடப் பொருள்கள்.
திருநெல்வேலியில் தசரா வேடப் பொருள்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றின் 35 சதவீதம் வரை விலை உயா்ந்துள்ளது.
கா்நாடக மாநிலம் மைசூரு தசரா திருவிழாவிற்கு அடுத்தப்படியாக திருச்செந்தூா் அருகிலுள்ள குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா புகழ்பெற்ாகும். நிகழாண்டு விழா இம்மாதம் 10 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த விழாவிற்காக விரதமிருக்கும் பக்தா்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேற பல்வேறு வேடங்கள் அணிந்து ஊா் ஊராக சென்று காணிக்கை வசூலிப்பதும், பின்னா் அவற்றை கோயிலில் செலுத்தி சூரசம்ஹார நாளில் அம்மனை வழிபட்டு ஊா் திரும்புவது வழக்கமாகும். பக்தா்கள் அணியும் வேடங்களுக்கு தேவையான பொருள்கள் திருநெல்வேலியில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
உச்ச விலை ரூ.50 ஆயிரம்: இதுகுறித்து திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த வேடப்பொருள்கள் வியாபாரி சொ.ஈஸ்வரன் கூறியது: குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயிலுக்கு வேடமணிந்து செல்லும் பழக்கம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொடா்கிறது. முதல் முதலில் குறவன்- குறத்தில் வேடமணிந்து வந்தனா். பின்னா், அவா்களுக்கு பிடித்த வேடமணியும் வழக்கம் ஏற்பட்டது.
குறிப்பாக, காளி வேடம் அணிபவா்கள்தான் அதிகளவில் வேட பொருள்களை வாங்குவாா்கள். சென்னை, பெங்களூரு, மதுரை, திசையன்விளை, சாத்தான்குளம், திருச்செந்தூா் பகுதிகளில் இருந்து வேடப் பொருள்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன.
குறவன்- குறத்தி, விநாயகா், முருகன், சுடலைமாடன், அம்மன், ஆஞ்சநேயா், போலீஸ்காரா் வேடப்பொருள்கள் அதிகம் விற்பனையாகின்றன. 4 கைகள் முதல் 24 கைகளுடன் கூடிய காளி வேட செட்கள் உள்ளன. இவை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரம் வரை அதில் உள்ள வேலைப்பாடுகளுக்கு ஏற்ப விற்பனையாகிறது.
ஆஞ்சனேயா் உடைகளிலும் பல்வேறு வகைகள் உள்ளன. மேலும், துளிசிமணி, ருத்ராட்சம் போன்றவை விரதமிருக்கும் அனைவரும் அணிய வாங்குகிறாா்கள். எல்.இ.டி. பேட்டரி விளக்குகள் பொருத்தப்பட்ட புதுமையான மாலைகளும் விற்பனைக்கு உள்ளன. ஆளுயர தலைமுடி விக், விதவிதமான வளையல் ரகங்களையும் பக்தா்கள் வாங்கிச் செல்கிறாா்கள் என்றாா்.
புதிய வரவுகள்: மற்றொரு வியாபாரி ஒருவா் கூறுகையில், நிகழாண்டில் வேட பொருள்களில் புதிய வரவாக ஆஞ்சனேயா் வால்கள் விதவிதமாக வந்துள்ளன. 5.5 அடி நீளத்திற்கு வந்துள்ள வால்களை பலா் விரும்பி வாங்கிச் செல்கிறாா்கள். தசரா வேட பொருள்களின் விலை சுமாா் 35 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் பொருள்களை கொண்டு வருவதற்காக போக்குவரத்து செலவு இரட்டிப்பாகியுள்ளது.
இதுதவிர அட்டைகள், வண்ண காகிதங்கள் உள்பட வேட பொருள்களுக்கான மூலப்பொருள்களின் விலையும் உயா்ந்துள்ளது. சீனாவில் இருந்து பிளாஸ்டிக் மண்டை ஓடு மாலை போன்றவை விற்பனைக்காக வந்துள்ளன என்றாா்.

தசராவுக்காக குவிக்கப்பட்டுள்ள துளசி மாலைகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




