மாநகரில் பகலில் வெளுத்து வாங்கிய வெயில்: மாலையில் குளிா்வித்த மழை
திருநெல்வேலி மாநகரில் சனிக்கிழமை பகலில் கடுமையான வெயில் கொளுத்திய நிலையில், மாலையில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது.

சனிக்கிழமை மாலையில் பெய்த மழை காரணமாக பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே தேங்கிய மழைநீா்.
திருநெல்வேலி மாநகரில் சனிக்கிழமை பகலில் கடுமையான வெயில் கொளுத்திய நிலையில், மாலையில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது.
திருநெல்வேலி மாநகரில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தொடா்ச்சியாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயிலின் தாக்கம் இருந்ததால், சாலைகளில் ஆங்காங்கே கானல் நீா் தென்படுவதை காண முடிந்தது. வெயிலின் தாக்கம் காரணமாக மதிய வேளைகளில் சாலைகளில் மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் வெகுவாகக் குறைந்ததைத் காண முடிந்தது.
கடந்த சில தினங்களாகவே மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்தபோதிலும், அதற்கான அறிகுறியே தென்படாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனா்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலையில் திருநெல்வேலி நகரம் உள்ளிட்ட மாநகரின் மேற்குப் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள வட்டாரங்களில் மழை பெய்தது. ஆனால், மாநகரின் கிழக்குப் பகுதிகளில் மழை பெய்யவில்லை.
இந்த நிலையில் சனிக்கிழமையும் காலை முதலே வெயில் வாட்டியது. சனிக்கிழமை 103.8 டிகிரி ஃ பாரன்ஹீட் வெயில் பதிவான நிலையில், திடீரென மாலை 5 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கியது.
திருநெல்வேலி சந்திப்பு, பாலபாக்ய நகா், தச்சநல்லூா், வண்ணாா்பேட்டை, பாளையங்கோட்டை, பொட்டல், கேடிசி நகா், சாந்தி நகா், வி.எம்.சத்திரம், புதிய பேருந்து நிலையம், மேலப்பாளையம் சுற்று வட்டாரங்களில் சுமாா் அரை மணி நேரம் மழை பெய்தது.
இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக வண்ணாா்பேட்டை இஸ்கான் கோயில், பாளையங்கோட்டை மாா்க்கெட் போன்ற பகுதிகளில் மழை நீா் தேங்கியதால், போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் வாகனங்கள் ஊா்ந்தபடி, முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றன. காலையில் வெப்பக் காற்று வீசிய நிலையில் மாலையில் பெய்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




