தென்காசி, ஜூன் 15: குற்றாலத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான தங்கும் விடுதிகள், பயணிகள் தங்கும் வகையில் பராமரிக்கப்பட வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் விரும்புகின்றனர்.
குற்றாலத்திற்கு ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கிறது.
ஆனால், குற்றாலம் வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான தங்கும் விடுதிகள் இல்லை என்ற நிலைதான் காணப்படுகிறது.
குற்றாலத்தில் 90-க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. மேலும், காலனிகளில் உள்ள வீடுகளிலும் பயணிகள் தங்குகின்றனர்.
தனியார் தங்கும் விடுதிகளில் சில குறிப்பிட்ட தங்கும் விடுதிகளைத் தவிர, பிற அனைத்து தங்கும் விடுதிகளிலும், தங்கும் அறைக்கான கட்டணம் நிர்ணயிக்கப்படுவதில்லை.
கட்டணத் தொகை குறித்தும் போர்டு எழுதி வைக்கப்படுவதில்லை.
சில தங்கும் விடுதிகளில் 12 மணி நேரத்திற்கு வாடகை வசூலிக்கின்றனர்.
சில தங்கும் விடுதிகளில் எப்போது அறை புக்செய்தாலும் மறுநாள் காலை வரையிலும் ஒருநாளாக கணக்கிடப்படும். சில தங்கும் விடுதிகளில் மட்டுமே நிரந்தரமான கட்டணம், புள்ளி விவரங்களுடன் போர்டுகளை வைத்துள்ளனர்.
சீசன் நன்றாக இருக்கும்பட்சத்தில் விடுதிக்கான கட்டணமும் அதிகளவில் உயர்ந்துவிடும். இவற்றை முறைப்படுத்தி ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் விரும்புகின்றனர்.
குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சிக்கு சொந்தமாக பல தங்கும் விடுதிகள் உள்ளன. குற்றாலம் பேரருவிக்கு அருகில் 38 குடில்களும், மல்லிகை தங்கும் விடுதியில் 20 அறைகளும், ரோஜா தங்கும் விடுதியில் 24 அறைகளும், தென்காசி சாலை தங்கும் விடுதியில் 22 அறைகளும், 12 குடில்களும், பேருந்து நிலையத்தின் மாடியில் 7 அறைகளும், சத்திரம் தங்கும் விடுதியில் 22 அறைகளும், அருவி ஹாலில் 6 ஹால்களும் பேரூராட்சிக்கு சொந்தமாக உள்ளது.
இவற்றில் பேரருவி தங்கும் விடுதி, ரோஜா தங்கும் விடுதியில் மட்டுமே பயணிகள் தங்கமுடியும். மற்ற தங்கும் விடுதிகளில் பயணிகள் யாரும் தங்கமுடியாது.
இவை மிகவும் மோசமான நிலையில் பராமரிக்கப்படுவதே காரணம். இங்கு படுக்கை வசதி, கழிப்பறை, குடிநீர், உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளே கிடையாது.
இதனால், ஆண்டுதோறும் இந்த விடுதிகளின் மூலம் வரும் வருவாயை விட பராமரிப்பு செலவே அதிகமாக உள்ளது.
இங்கு நவம்பர் முதல் மே வரை, ஜூன், செப்டம்பர் மாதங்களில் தங்கும் விடுதிகளுக்கு ஒரு கட்டணம், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஒரு கட்டணம் என மூன்றுவிதமாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இங்கு முன்பதிவும் செய்யப்படுகிறது. ஆனால், இங்குள்ள தங்கும்விடுதிகளின் பராமரிப்பு மிகவும் மோசமாக உள்ளதால் சுற்றுலாபயணிகள் இந்த கட்டணத்தை விட அதிகமான கட்டணம் செலுத்தி தனியார் தங்கும் விடுதிகளில் தங்குகின்றனர்.
எனவே பேரூராட்சி நிர்வாகம், அரசுக்கு சொந்தமான தங்கும் விடுதிகள், குடில்களை சுற்றுலா பயணிகளுக்கு பயன்படும் வகையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவேண்டும் என விரும்புகின்றனர்.
பழைய குற்றாலம்:
பழைய குற்றால அருவி பகுதியில் தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதிகள் மட்டுமே அதிகளவில் உள்ளன.
இப்பகுதியில் ஆயிரப்பேரி ஊராட்சி சார்பில் அல்லது அரசின் சார்பில் தங்கும் விடுதிகள் அமைக்கவேண்டும் என சுற்றுலாப் பயணிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.