இளம்பெண்ணை வெட்டிக் கொல்ல முயற்சி: போலீஸ் விசாரணை
By நாகர்கோவில், | Published On : 12th April 2014 12:57 AM | Last Updated : 12th April 2014 12:57 AM | அ+அ அ- |

நாகர்கோவில் கோட்டாறில் இளம்பெண்ணை, பைக்கில் வந்த மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை காலை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்றனர். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோட்டாறு பட்டாரியார் நெடுந்தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ராஜாராம் (33). இவர் வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்த சமீராபானுவை (30) 12 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலை வீட்டின் முன் கோலம் போட சமீரா பானு வெளியே வந்தாராம். அப்போது பைக்கில், ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் சமீராபானுவிடம் முகவரி கேட்டுள்ளனர். சந்தேகமடைந்த சமீராபானு வீட்டுக்குள் நுழைய முற்பட்டபோது, அந்த இருவரும் பின் தொடர்ந்து வந்து, அரிவாளால் சமீரா பானுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனராம். சமீரா பானுவின் அலறல் சப்தம் கேட்டு, வீட்டில் இருந்த கணவர் மற்றும் அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து, சமீரா பானுவை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகவலறிந்த ஏ.டி.எஸ்.பி. இளங்கோ, டி.எஸ்.பி. முத்துப்பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து, கோட்டாறு போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.